Sunday, October 3, 2010

வண்டி கட்டிட்டு போய் எந்திரன்!

எந்திரன் - அனைத்து தமிழ் புத்தகங்களிலும் ப்லாக்க்களிலும் துவைத்து தொங்க போட்டுகொண்டு இருக்கப்படும் வார்த்தை. இங்க நம்ம ஊரில் பொட்டி கிடைக்க வில்லை என்று ரிலீஸ் சிறிது தாமதம் ஆகுவது போல தெரிந்த உடன் பக்கத்தில் எந்த ஊரில் ரிலீஸ் என்று தேடினால் இங்கிருந்து ஒரு மணி நேரத்தில் இருக்கும் ராச்சஸ்டரில் தினமும் 3 காட்சிகளாக ஒரு வாரத்திற்கு ஓடுவதாக கண்டுபிடித்தோம். நம்ம ஊரு படங்கள், அதுவும் கிட்டத்தட்ட 3 மணிநேர படங்கள் எல்லாம் குழந்தைகள் உட்கார்ந்து பார்ப்பது கஷ்டம் என்பதால் நண்பர்கள் (bachelor party மாதிரி!)  குழுவாக  6 பேர் சனிக்கிழமை மதியம் 4:35 மணி காட்சிக்கு கிளம்பினோம். நண்பர் தனது வண்டியை எந்திரன் போஸ்டர் உடன் தயார் செய்து வைத்திருந்தார். எந்திரன் பாடல்கள், எந்திரன் போஸ்டர், சூப்பர் ஸ்டார் ரஜினி படங்கள் போட்ட அலங்காரங்கள் என்று ஒரு மூட் உடன் தான் கிளம்பினோம்.

4 மணிக்கு தியேட்டர் சென்று அடைந்தால் சுத்தமாக கூட்டமே இல்லை. வெளியே எந்திரன் படப்பெயரை பார்த்த உடன் கொஞ்சம் நிம்மதி. சரியான இடத்திற்குத் தான் வந்திருகோம்ன்னு. ஆன்-லைன் டிக்கெட்டை ($20 ஒரு டிக்கட்) குடுத்து டிக்கட் வாங்கி விட்டு வரிசையில் நின்றால் நமக்கு முன்னாடி நின்னுகிட்டு இருந்த கும்பலும் பின்னாடி நின்ன கும்பலும் தெலுங்குல பேசிக்கிட்டு இருந்த உடன் எல்லாருக்கும் சந்தேகம். பார்க்க வந்தது எந்திரனா இல்லை எந்திருடுவான்னு. தியேட்டர்காரன்கிட்ட கேட்டு என்ன ஆகப்போகுது - அவனுக்கு தமிழும் ஒன்னுதான், தெலுங்குவும் ஒன்னுதானே. சரின்னு போன்ல ஆன்-லைன் டிக்கெட் புக் பண்ணிய விவரத்தைப் பார்த்து அதில் தமிழ் தான் என்று தெரிந்த  உடன் தான் கொஞ்சம் நிம்மதி.

கிட்டத்தட்ட 500 பேரு உட்கார்ற தியேட்டர்ல மொத்தமே 50 பேரு தான் இருந்திருப்போம். (ராவணன் ஹிந்தி படம் பார்த்ததுக்கு இது பரவாயில்லை - அதுல தியேட்டர்லயே நாங்க ரெண்டு பேரு தான் இருந்தோம்!). சனிக்கிழமை மதியக் காட்சி என்பதால் நல்ல கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்த்து போய் பெரிய அல்வா!   படம் - நல்ல படம், ஆனா ரஜினி ஸ்டைல், பஞ்ச் எல்லாம் மிஸ்ஸிங். ரஜினிக்கும் ஐஸ்வார்யாவுக்கும் முகத்தில் வயசு தெரிகிறது என்பது உண்மை!! நல்ல ஜனரஞ்சகமான படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை?! படம் முடிந்ததும் ராச்சஸ்ட்டரில் உள்ள மைசூர் உட்லண்ட்ஸ் உணவகத்தில் நல்ல உணவிற்கு பிறகு வீடு திரும்பினோம்!! படங்கள் கீழே.

அமெரிக்க box office இல் எந்திரன் முதல் இடம் என்று இன்று நம்ம ஊரு செய்திகளில் கதை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது தான் அமெரிக்காவில் இந்த வார இறுதிக்கான box office நிலவரம் ..இதுல எந்திரன் எங்க இருக்குனு நீங்களே தேடிக்கோங்க..BOX ஆபீஸ். எப்படி எல்லாம் படத்தை விளம்பரம் பண்ணுறாங்க..பெருமை பீத்தக்களையங்கன்னா இது தானோ?

Friday, September 10, 2010

நாளை, செப்டம்பர் 11, 2010!!!

செப்டம்பர் 11 என்பது அமெரிக்க வரலாற்றில், ஏன் உலக வரலாற்றிலயே ஒரு முக்கிய தினம் ஆகிவிட்டது, 2001 வருடத்திற்குப் பின். நாளை மீண்டும் ஒரு செப்டம்பர் 11. செப்டம்பர் 11 இங்கு பல குடும்பங்களுக்கு உணர்ச்சிபூர்வமான நாள். இந்த  வருடம் முந்திய சில வருடங்களை விட கொஞ்சம் சூடு அதிகம் தான் என்று படுகிறது. அதற்கு காரணங்கள் இரண்டு: முதலில் இரட்டைக் கோபுரங்கள் இருந்த இடத்திற்கு அருகில் வரப்போவதாக சொல்லப் படும் இஸ்லாமிக் சென்ட்டர். இதற்கு பலர்  எதிர்ப்பு, பலர் ஆதரவு. அமெரிக்காவில் இது ஒரு அரசியல் விஷயமாகவே கடந்த சில வாரங்களில் உருவெடுத்து விட்டது. இரண்டாவது, செப்டம்பர் 11 அன்று இங்கு ப்ளோரிடாவில் குரானை எரிப்போம், வாருங்கள் என்று ஒரு பாதிரியார் (Rev. Terry Jones) விடுத்த அழைப்பு. இதில் இந்த வருடம் செப்டம்பர் 11 அன்று தான் ரமதானும்.   ஜோன்ஸ்க்கு உலக அளவில் பலர் கண்டனம் தெரிவித்ததும் நேற்று குரானை எரிப்பதை கைவிட்டுவிட்டேன் என்று ஒரு தொலைக்காட்சியில் கூறியவர், இன்று இன்னும் அதைப்பத்தி யோசித்துக் கொண்டு தான் இருக்கிறேன் என்று நம்ம ஊர் அரசியல்வாதி மாதிரி பல்டி அடிக்கிறார். 

எது எப்படியோ நாளை விநாயகர் சதுர்த்தி, ரமதான், செப்டம்பர் 11 மூன்றும் ஒன்றாக வருகிறது. அவைகளை நினைவூட்ட சில படங்கள் கீழே!! (அனைத்தும் கூகிள்-இல் இருந்து எடுத்தது தான்!). கொண்டாடுபவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள். துக்கம் அனுஷ்டிப்பவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இரண்டுமே செய்யப் போவதில்லை என்று கூறுபவர்களுக்கு இருக்கவே இருக்கு நம்ம தொலைக்காட்சிகள். கலைஞர் டிவியில் மட்டும் நாளை நான்கு படங்களாம் - அதுக்கே கிட்டத்தட்ட 16 மணி நேரங்கள் ஆகாது?. தூங்க, மற்றவைக்கு 8 மணி நேரம் - 24 மணி நேரம் முடிந்தது. அப்புறம் புள்ளையாராவது, செப்டம்பர் 11 ஆவது!!. நன்றி!



Monday, August 23, 2010

மலர்களே, மலர்களே!!

புகைப்படம் எடுப்பதில் கொஞ்சம் ஈடுபாடு உண்டு, பல வருடங்களாகவே!  சில வருடங்களாக டிஜிட்டல் காமெராக்கள் வந்ததும் புகைப்படங்களை வகைப்படுத்தி வைப்பது எளிதாகிவிட்டது. அப்படி சில வருடங்களாக சேமித்து வைத்த பூக்களின் படங்கள். பெரும்பாலும் அமெரிக்காவில் எடுத்தது, சிலது  இந்தியாவில், சிலது கனடாவில், சிலது  இத்தாலியில்.  இன்டர்நெட் வேக வசதிக்காக இங்கே முழு resolution-இல் படங்களைப் போடவில்லை.  ஏதாவது புகைப்படத்தை வேறு எங்காவது உபயோகிக்க வேண்டுமானால் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.  ஒரு சில புகைப்படங்களை கீழேக் குடுத்துள்ளேன்...மற்றவை இந்த பக்கத்தில். என்சாய்!!!!! பிடித்திருந்தால் கண்டிப்பாக பின்னூட்டதிலும் ஓட்டிலும் பதிவு செய்யவும். இன்னும் பல ஊர்களின் சுற்றுலாப் படங்கள், இயற்கைப் படங்கள் என்று உங்களை திணற அடித்து விடலாம்!

Thursday, August 19, 2010

கூட்டாஞ்சோறு - 4

இந்த மாத துவக்கத்தில் இருந்தே கொஞ்ச நாள் காணாமப் போக வேண்டியதாகி விட்டது. குடும்பத்துடன் 6 நாட்கள் நியூ யார்க் சிட்டி, நியூ ஜெர்சி, வாஷிங்டன் போன்ற ஊர் சுற்றிப் பார்க்க சென்றது தான் முக்கிய காரணம். குழந்தைகள் மற்றும் இந்தியாவில் இருந்து வந்திருக்கும் அப்பா அம்மா என்று  கூட்டமாப் போனதால  நிறைய வேலைகள். அந்த சுற்றுப் பயணத்தைப் பற்றி புகைப்படங்களுடன் கூடிய விரைவில் எழுதுகிறேன். நாம கொஞ்ச நாள் பிஸியா இருந்திட்டு வந்தா நிறைய விஷயங்கள் நடந்து போச்சுது போல...(ஹி ஹி..ஒண்ணும் நடக்கலைங்கிறதை வெளிய சொல்ல முடியுமா?!).
*****************
ரொம்ப வருஷம் கழிச்சு சுதந்திர தின சிறப்பு கொண்டாட்டங்கள் கலைஞர் மற்றும் ஜெயா டிவில பார்க்க முடிஞ்சுது. கலைஞர் டிவில லியோனியின் பட்டிமன்றம் காலையில. 30 நிமிஷம் விளம்பரம், 4 பேச்சாளர்களுக்கும் ஆளுக்கு  சில நிமிடங்கள், லியோனி ஒரு 10 நிமிடங்கள் - பட்டிமன்றம் முடிந்தது. யாரு சொல்ல வந்த விஷயமுமே சொல்லி முடிக்காத மாதிரி இருந்தது. அவங்களுக்கும் ஸ்லாட்டை நிரப்பனுமே!! ஜெயா டிவில காலையிலயே அம்மாவின் திருச்சி எழுச்சிக் கூட்டம் தான்..அது முடிஞ்ச உடன் ஞாயிறு தோறும் வரும் விசுவின் ப்ரோக்ராம். அம்மாவே காலையில தரிசனம் குடுத்தாச்சு அதுக்கு மேல என்ன சிறப்பு நிகழ்ச்சிகள்ன்னு நினைச்சிட்டாங்க போல.
*****************
எந்திரன், ரன்தீவ் ன்னு "பிரச்சனைகள்" வந்ததுல எல்லாரும் காமன்-வெல்த் விளையாட்டு ஊழலை மறந்தாச்சு.  ஆனாலும் நம்ம ஊரு மீடியா எல்லாம் எத்தை தின்றால் பித்தம் தெளியும்ன்னு அலைஞ்சிட்டுத் தான் இருக்காங்க போல. நல்லா பொழுதுபோக்கு அவங்களுக்கு. பேசாம பிசிசிஐ டெய்லி ஒரு மேட்ச் வச்சிட்டா இந்த பிரச்னையே இல்லை..எல்லாரும் அடுத்த நாள் சேவாக்கையும் மறந்திட்டு செஞ்சுரியையும் மறந்திட்டு அவங்க வேலையப்  பார்க்கப்  போயிருவாங்க. இப்படி 2, 3 நாட்கள் கேப் விட்டு, இப்ப பாருங்க. 10 வருஷத்துக்கு முன்னாடி அழுகுணி ஆட்டம் ஆடினவன், 20 வருஷத்துக்கு முன்னாடி டீம் உள்ளயே பாலிடிக்ஸ் பண்ணினவன்னு எல்லாரும் ஒரு மைக் பிடிச்சிக்கிட்டு புத்தருக்கு பக்கத்து வீட்டுக்காரன் மாதிரி பேட்டி குடுக்கிறாங்க....முடியலை....
*****************
 நான் ஸ்கூல் படிக்கும்போது கும்பகோணத்துல 6 வருடம் இருந்தோம். அப்ப காவிரிக் கரையில ஆடிப் பெருக்கு கொண்டாடியது இன்னும் நினைவில் இருக்குது. பெங்களூர், அமெரிக்கான்னு வந்த பிறகு ஆடிப் பெருக்கு எல்லாம் மறந்தே போயிருச்சு? இந்த வருடம் அப்பா அம்மாவும் வந்திருப்பதால் ஒரு உத்வேகத்துடன் 10 வகை சாதங்களுடன்  பக்கத்துல இருக்கிற ஏரிக்கரைக்கு போய்ட்டு வந்தோம். ஒரு படம் இங்கே!


*****************
புதுசா ஜோஸ் ஆலுக்காஸ் கடையின் விளம்பரத்துல விஜய் வர்றாரு. கார்ல வந்து இறங்கும்போது கருப்பு பூனை (?) படை, இவரை விட வயசானவரு இவரு கால்-ல விழுந்து கும்பிடுறதுன்னு..ஸ்..ஸ்..அப்பா..3 மணி நேர படமா இருந்தாலும் 30 நொடி விளம்பரமா இருந்தாலும் இந்த பில்ட்-அப்பு இருக்கே......பார்த்து மகிழ்ந்துக்கோங்க!! இத்தனைக்கும் ஒரு மொக்கை விளம்பரமா இருக்குது இது!

*****************
கூடிய விரைவில் இன்ப சுற்றுலா புகைப்படங்களுடன் மீண்டும் சந்திப்போம்!

Friday, July 30, 2010

அமெரிக்க ஜோக்குகள்!!

அமெரிக்காவில் ஒரு முடிதிருத்தும் கடைக்கு ஒரு பூக்காரர் சென்றார். வேலை முடிந்ததும் எவ்வளவு என்று கேட்க, அதற்கு முடிதிருத்துபவர், "நான் சேவை செய்கிறேன்..எதற்கும் பணம் கொடுக்க வேண்டாம்" என்று கூறுகிறார். பூக்காரருக்கு ஆச்சரியம். நன்றி தெரிவித்து விட்டு வீட்டுக்கு வந்துவிட்டார். அடுத்த நாள் முடிதிருத்துபவர் கடையைத் திறக்க வரும்போது வாசலில் அவருக்கு ஒரு நன்றி கார்டும் பெரிய பூங்கொத்தும் இருக்கிறது. இரண்டாவது நாள் அதே கடைக்கு ஒரு சாக்லேட் கடை உரிமையாளர் வருகிறார், அவரும் ஆச்சரியப்பட்டுத்  திரும்புகிறார். மூன்றாம் நாள் முடிதிருத்துபவர் கடையைத் திறக்க வரும்போது வாசலில் அவருக்கு ஒரு நன்றி கார்டும் பெரிய சாக்லேட் பாக்சும் இருக்கிறது. மூன்றாம் நாள் கடைக்கு ஒரு இந்திய சாப்ட்வேர் காரர் வருகிறார், வேலை முடிந்ததும் அவரும் ஆச்சரியப் பட்டு திரும்புகிறார். அதற்கு அடுத்த நாள் கடையை திறக்க வரும்போது முடிதிருத்துபவரால் கடைக்கு அருகில் கூட செல்ல முடியவில்லை. அந்த ஊரில் இருக்கும் அத்தனை இந்திய சாப்ட்வேர் மக்களும் கடை வாசலில் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்!
********************************
அமெரிக்காவில் மட்டும் காணக் கிடைப்பவை: 
1. பிட்ஸா டெலிவரிக்காரன் ஆம்புலன்சை விட வேகமாக வீட்டுக்கு  வந்து விடுவான்.
2.  டபுள் சீஸ் பர்கர், லார்ஜ் fry, சாக்லேட் குக்கி உடன் diet கோக் ஆர்டர் செய்பவர்கள்!
3. $ 30000 கொடுத்து வாங்கிய காரை காராஜில் நிறுத்தாமல் வெளியே நிறுத்தி விட்டு உடைந்த பொருட்களைப் போட்டு கராஜை மூடி வைப்பவர்கள்!

********************************
ஒரு நாள் சொர்க்க வாசலில் பெரிய வரிசை.  முதலில் ஒரு சர்தார்ஜி வருகிறார். அவரைப் பார்த்த செயின்ட் பீட்டர், "உன்னைப் பற்றி சொல்லு" என்கிறார். உடனே சர்தார்ஜி, " என் பெயர் குர்தாஸ், நியூயார்க் சிட்டியில்  டாக்ஸி டிரைவராக வேலை செய்தேன்" என்கிறார். செயின்ட் பீட்டரும் தனது லிஸ்டை சரி பார்த்து விட்டு, "சரி இந்த பட்டுத்துணி உடுத்திக் கொண்டு தங்க வாகனத்தில் சொர்க்கத்திற்குள் செல்லலாம்" என்று கூறிகிறார். அடுத்து வரிசையில் ஒரு பாதிரியார். "என் பெயர் ஜோசப், பல இடங்களில் பாதிரியாராக சேவை செய்தவன்" என்கிறார். செயின்ட் பீட்டரும் தனது லிஸ்டை சரி பார்த்துவிட்டு, "இந்த சாதாரண துணியை உடுத்திக் கொண்டு நடந்து சொர்க்கத்துக்குள் செல்லலாம்" என்கிறார். இதைப் பார்த்ததும் செயின்ட் பீட்டரின் உதவியாளருக்கு சந்தேகம் வந்து அவரிடம் எதற்கு இந்த வித்தியாசம் என்று கேட்கிறார். அதற்கு செயின்ட் பீட்டர், "அவரவர் செய்த வேலையைப் பொறுத்து தான் இங்கு பரிசு, அந்த பாதிரியார் பிரசங்கம் செய்த போது முக்கால் வாசி பேரு தூங்கிட்டாங்க. ஆனால், குர்தாஸ் எப்போதெல்லாம் நியூயார்க் சிட்டியில் கார் ஓட்டினாரோ அப்போதெல்லம் கார் உள்ளே இருந்தவர்கள், வெளியே நடந்தவர்கள் எல்லாரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு கடவுளை மட்டும் நினைத்தார்கள்" என்றார்! 

********************************
"பஞ்ச் பஞ்சாமிர்தம்":
சிகரெட்: காகிதத்தில் சுத்தப்பட்ட புகையிலையின் ஒரு முனையில் நெருப்பு, மறுமுனையில் முட்டாள்.
********************************

Tuesday, July 27, 2010

எந்திரனும் வோல்வேரினும்!!

எந்திரன் படப் பாடல்கள் இன்னும் சில நாட்களில் வரவிருப்பதும் அந்தப் படப் போஸ்டரும் தான் இன்றைய talk of the town (கோடம்பாக்கம் டவுன்?) போல இருக்கிறது. போஸ்டரில் ரஜினிகாந்த் படத்தைப் பார்த்த உடன் எனக்கு X-men Wolverin படத்தின் Hugh Jackman கெட்-அப் தான் சட்டென்று ஞாபகத்துக்கு வருது!! என்ன ரஜினிக்கு தலைல கொஞ்சம் காரக் கொழம்பு எக்ஸ்ட்ரா கொட்டிருக்காங்களோ?? இரண்டு படங்களும் இங்கே!!

Thursday, July 22, 2010

அமெரிக்காவைப் பிடித்து ஆட்டும் புது பேஷன் - ஸில்லி பேண்ட்ஸ் !!


அமெரிக்காவில் இருக்கும் பெற்றோர்கள் யாரும் இந்த "வியாதி"யில் இருந்து தப்பித்து இருக்க முடியாது - அது தான் Silly Bandz!! (இங்கே சென்று பார்க்கலாம்!). 2, 3 வயது குழந்தைகளில் இருந்து டீன்-ஏஜர்கள் வரை அனைவரது கைகளிலும் மாரியாத்தா காப்பு கட்டியது போல இப்போது ஸில்லி பேன்ட்ஸ்.  ஒண்ணும் புது விஷயம் எல்லாம் இல்லை. சாதாரண சிலிகான் ரப்பர் பேண்ட்-ஐத் தான் வெவ்வேறு டிசைன்களில் செய்து விக்கிறார்கள். விலங்குகள், கடல் உயிரினங்கள், ABCD மாதிரி டிசைன், சதுரம், முக்கோணம் போன்ற டிசைன்கள் என்று பலவிதம். அமெரிக்காவில் இருந்து சீனாவிற்கு சென்ற ஒரு வியாபாரக் குழு அங்கே இதே போல  ரப்பர் பேண்ட்-ஐப் பார்த்து இந்த ஐடியா நல்லா இருக்கே என்று இங்கு வந்து செய்ய ஆரம்பித்துள்ளார்கள். பெரிய பிசினஸ் பிளான் எல்லாம் எதுவுமில்லாமல் சில கடைகளில் 2008 இல் கிடைக்க ஆரம்பித்தது சென்ற வருட இறுதியில் அமெரிக்காவில் அதிகமாக விற்கும் பொருட்களில் ஒன்றாக ஆகிவிட்டது. திடீர் என்று எதிர்பாராமல் ஏகப்பட்ட டிமாண்டு! பள்ளிகளில் குழந்தைகள் வெவ்வேறு டிசைன்களை மாற்றிக்கொள்வதும், அதே போல்  டிசைன் தனக்கும் வேண்டும் என்று அடம் பிடிப்பதும் அன்றாட நிகழ்வாகி விட்டது. இதனால் வெறுத்து போன சில பள்ளிகள் silly bandz-க்கு தடையே விதித்து விட்டன. இன்னும் சில பள்ளிகளில் ஆசிரியர்கள் ஒழுங்காக வேலைகளைச் செய்யும் குழந்தைகளுக்கு இதையே பரிசாகக் குடுக்க ஆரம்பித்தனர். இன்னும் silly bandz பற்றிய விவாதங்கள் பள்ளிகளில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இப்போ இங்க கோடை விடுமுறைங்கறதால கொஞ்சம் பள்ளிகளுக்கு மூச்சு விட சந்தர்ப்பம். அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கும்போது மீண்டும் இந்த விஷயம் செய்திகளில் அடிபடும்.

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்த கம்பெனி ஒரு பைசா கூட விளம்பரத்துக்கு செலவு செய்யவில்லையாம். அனைத்து விளம்பரங்களும் சோசியல் நெட்வொர்க் தளங்களான facebook, twitter வழியாக மட்டுமே செய்யப்பட்டிருகின்றன. எதேச்சையாக ஆரம்பித்த ஒரு சிறிய ஐடியா இன்றைக்கு அந்த கம்பெனிக்கு மில்லியன்களை அள்ளிக்கொடுத்துக் கொண்டிருக்கிறது! 24 பேண்ட்கள் கொண்ட ஒரு பாக்கெட் விலை இங்கே 5 டாலர்கள், விலை அதிகம் தான். ஸில்லி என்று பெயர் வைத்தது இதை வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கும் அப்பா அம்மாக்களைக் குறித்து தானோ? நாங்களும் எங்க வீட்டுல பணம் செலவு பண்ணி இந்த silly bandz காய்ச்சலில் இருக்கிறோம் - அந்த ஆதங்கத்தில் தோன்றிய பதிவு! மேலும், இன்றைய CNN செய்திகளில் இதைப் பற்றிய ஒரு செய்தியைப் பார்த்த உடன் எழுதியது. அந்த CNN வீடியோ பார்க்க நினைப்பவர்கள் இங்கே செல்லவும்!