Wednesday, December 30, 2009

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - வரவேற்போம்!

புத்தாண்டு நாள் முதல் திருநெல்வேலி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப் படுத்த மாவட்ட ஆட்சியர் திரு.ஜெயராமன் தடை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளார் என்று இன்றைய செய்திகளில் படித்த உடன் தோன்றியது இந்த பதிவு. இந்த வருடம் கோடை விடுமுறையில் திருநெல்வேலி சென்றிருந்த பொது தென்பட்ட மாற்றங்களில் பிளாஸ்டிக் உபயோகமும் ஒன்று.

மாலை வேளைகளில் லாலா கடை (sweet store ஐ திருநெல்வேலியில் இப்படி தான் கூப்பிடுவோம்!) முன்னால்  கூடி உலகப் (?) புகழ் வாய்ந்த திருநெல்வேலி அல்வாவை சூடாக 50 கிராம் வாங்கி சாப்பிட்டு விட்டு கொறிக்க கொஞ்சம் காரமும் வாங்கி செல்வது நெல்லை மக்களின் பொழுதுபோக்குகளில் ஒன்று. நெல்லை டவுன் இருட்டுக்கடை, ஜங்ஷன் சாந்தி ஸ்வீட்ஸ், லக்ஷ்மி விலாஸ் என்று பிரபலமான  கடைகளின் முன்னால் பெரிய கூட்டத்தையே காணலாம்.  சில வருடங்களுக்கு முன்னால் வரை  இந்த சூடு அல்வா வாழை இலையில் தான் தரப் பட்டு வந்தது. சூடான அல்வா வாழை இலையில் மிதக்கும் அழகே தனி தான். ஆனால் தற்போது அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் பேப்பரில் தான் அல்வா வழங்கப் படுகிறது. அனைத்து ஹோட்டல் களிலும் இதே கதை தான். இட்லி, சட்னி பார்சல் செய்ய உபயோகிக்க பட்ட வாழை இல்லை எல்லாம் போய் எங்கும் பிளாஸ்டிக் மயம். சூடாக எந்த பொருட்களையும் பிளாஸ்டிக் உடன் உபயோகிக்க கூடாது என்பது அறிவியல் பூர்வமான உண்மை. அறியாமை மற்றும் அறிவுறுத்தல் இல்லாமை காரணமாக இதை பலர் கண்டுகொள்வதில்லை. மேலும், நெல்லை மாவட்டத்தில் ஒரு ஊரிலிருந்து அடுத்த ஊருக்கு செல்லும் வழியில் உள்ள காலி இடங்களில் எல்லாம் பிளாஸ்டிக் பை பறந்து கொண்டு இருக்கிறது. மத்த ஊர்களிலும் நிலைமை வித்தியாசமாக இருக்காது என்று நினைக்கிறேன்.

இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது, இன்றைய செய்தி மிகவும் நல்ல செய்தி என்று தோன்றுகின்றது. நெல்லை மாவட்டத்தின் பெரிய துணி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் அனைத்தும் இந்த உத்தரவிற்கு ஆதரவு அளித்துள்ளது ஆட்சியரின் முயற்சிக்கு வெற்றி. இந்த முயற்சி வெற்றிகரமாக நடைமுறைப் படுத்த பட்டால், மற்ற இடங்களிலும் இதைப் பின்பற்ற முயற்சி எடுக்கப் படும் என்று நம்புகிறேன். நம் பொதுமக்களும் அரசியல்வாதிகளும் வியாபாரிகளும் இதற்கு ஒத்துழைப்பார்களா? அடுத்த முறை நெல்லை செல்லும்போதோ இல்லை அங்கே விசாரித்தோ சொல்லுகிறேன்!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!
(பி.கு. இங்கே வந்து படித்து செல்லும் நண்பர்கள் தங்களது கருத்துகளையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்! நன்றி!!)

Tuesday, December 29, 2009

4 படங்களின் விமர்சனங்கள்AFGHAN STAR (2009): தலிபான் "ஆட்சி"  முடிந்த பிறகு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளி வந்திருக்கும் மிகச்சில  documentary படங்களில் இதுவும் ஒன்று. அமெரிக்காவில் சில வருடங்களாக மிகவும் பிரபலமாக  இருக்கும்  American Idol நிகழ்ச்சி ஆப்கானிஸ்தானில் இப்போது மிகவும் பிரபலமாம். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் நால்வரின்  (2 ஆண்கள், 2 பெண்கள்) உண்மை வாழ்கையையும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் தான் இந்த படம். ஏற்கனவே டாகுமெண்டரி என்று கூறியிருக்கிறேன் - அப்படியே படத்தில் வரும் அனைவரின் கருத்தை மட்டும் கூறுவதோடு நிறுத்திக்கொள்வது படத்துக்கு ஒரு பிளஸ் பாயிண்ட். 30 வருடங்களாக போரில், அதுவும் சில வருடங்கள் தலிபான் ஆட்சியில்,   கஷ்டப்பட்ட ஒரு நாட்டில் மேலை நாகரிகமான ஆடல், பாடல் நிகழ்ச்சியை  தொலைகாட்சியில் நடத்துவது எவ்வளவு கஷ்டம் என்று தெரிகிறது. ஆப்கான் நாட்டில் தற்சமயம் நிலவும் வறுமை, மக்களின் வாழ்க்கை முறை போன்றவற்றைக்  கண்கூடாக பார்க்க முடிகிறது. பங்கு பெரும் 4 பேரையும் அவர்களது tribe ஐ பொருத்து பொதுமக்கள் ஆதரிப்பது நம்ம ஊரு தேர்தல் மற்றும் ஜாதி வேட்பாளர்களை நினைவுப் படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. 4 போட்டியாளர்களில் ஒரு பெண் பாடும்போது சற்றே உடல் அசைத்து பாடியதற்கு முழு நாடும் கண்டனம் தெரிவித்து (இஸ்லாமிய விதிகளுக்கு புறம்பானது என்று) அந்த பெண் தனது சொந்த ஊருக்கு திரும்ப முடியாத நிலை ஏற்படுகிறது. (இந்த இடத்தில யாருக்காவது மயிலாட குயிலாட போன்ற நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தால் எனக்கு தெரியாது!!). முழுப்  படத்தைப் பற்றியும் கூறி உங்களைப் படுத்த விரும்பவில்லை. நம்மைப் போல் ஆப்கான் பற்றி CNN இல், அமெரிக்காவின் கண்களால் மட்டுமே பார்த்து வந்தவர்களுக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவம். கூடிய விரைவில் இந்த படம் DVD இல் வரும் என்று தெரிகிறது. http://www.afghanstardocumentary.com/


THE COVE (2009): Investigative journalism என்ற வார்த்தைக்கு புது அர்த்தம் கற்பிப்பதைப் போல் வந்திருக்கும் டாகுமெண்டரி படம். ஆனால் "திரைக்கதை" மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்டு இருப்பதால் ஒரு த்ரில்லர் படம் பார்ப்பதைப் போன்ற அனுபவம் கிடைக்கிறது. ஜப்பானில் Taji என்ற சிறு கிராமத்தில்  Dolphin- களுக்கு இழைக்கப்படும் கொடுமையை உலகிற்கு எடுத்துச் சொல்ல சுற்றுசூழலில் அக்கறை உள்ள ஒரு குழு படும் பாடு தான் படம். Dolphin களை பாசமான, அறிவுள்ள ஒரு மீன் என்றே உலகின் பல்வேறு காட்சிகளில் பார்த்து வந்த நமக்கு முதன்முறையாக எப்படி அதைப் பிடிக்கிறார்கள், அதன் விலை,  பிடிக்கும்போது அவை உட்படுத்தப்படும் கொடுமைகள் போன்றவை மனத்தைக் காயப்படுத்தும் விவரங்கள். Taji கிராமத்து  அரசியல்வாதிகளில் இருந்து ஜப்பான் நாட்டின் அரசியல் வரை இதில் யார்யாருக்கு எப்படி பங்கு என்ற உண்மைகள் சுடுகின்றது. Dolphin மீன்களில் உள்ள mercury அளவு எப்படி மக்களை பாதிக்கின்றது, உலகில் கடல்வளங்கள் எப்படி சூறை ஆடப் படுகிறது போன்ற தற்காலத்துக்கு மிகவும் தேவையான அறிவியல்  விவரங்களை முகத்தில் அறைவது போல் கூறி இருப்பதில் இயக்குனர் வெற்றி பெறுகிறார். இந்தப் படம் தற்சமயம் அமெரிக்காவில் DVD இல் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு: http://www.thecovemovie.com/ 


DISTRICT 9 (2009): Neill Blomkamp என்ற இளம்  இயக்குனரின் (தென் ஆப்ரிக்காவை சேர்ந்தவர்) முதல் முழுநீள படம். வேற்று கிரக வாசிகள் பூமிக்கு வருவதைப் பற்றி ஏற்கனவே எத்தனையோ படங்கள் பார்த்திருந்ததால் அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் தான் இந்தப் படத்தை பார்க்க ஆரம்பித்தேன். சில வருடங்களுக்கு முன் தமிழில் வந்த விருமாண்டிப் படத்தைப் போல் hand-held camera வில் பலரைப் பேட்டி எடுப்பதைப் போல் தான் படம் ஆரம்பிக்கிறது. சரி மொக்கை போட்டு விடுவார்கள் என்று நினைத்தால் படம் சூடு பிடிக்கிறது. கதையென்று மிகவும் வித்தியாசமாக இல்லை. Hollywood Science Fiction படங்களுக்கே  உரிய விலையுயர்ந்த சண்டைகளும் கிராபிக்ஸ் களும் இல்லை. இருந்தாலும் சில நுண்ணிய வித்தியாசங்கள் காட்டி இருப்பதன் மூலம் குறைந்த செலவு படங்களையும் வெற்றி ஆக்கி காட்ட முடியும் என்று மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப் பட்டிருகிறது. வேற்றுகிரக கப்பல் என்றால் அது New York, Los Angeles, Rome போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள, உலகில் பலருக்கு தெரிந்த நகரத்திற்கு தான் வரும் என்ற Hollywood "உண்மையை" மாற்றி தென் ஆப்ரிக்காவில் உள்ள Johannesburg நகரத்திற்கு வருவதாக காட்டி இருப்பது ரசிக்கத் தக்கது. வேற்றுகிரக வாசிகளின் குடிசை வாழ்க்கை, தென் ஆப்ரிக்காவில் இருக்கும் இனவெறி பாகுபாடுகள் போன்றவற்றையும் படத்தில் இணைத்திருப்பது நம்மை நிமிர்ந்து பார்க்க வைகிறது. இதுவும் தற்சமயம்  அமெரிக்காவில் DVD இல் கிடைக்கிறது.

THE HANGOVER (2009): சமீபத்தில் நான் பார்த்த நல்ல நகைச்சுவை படங்களில் இது ஒன்று. கமல்/crazy மோகன் கூட்டணியில் வந்து அதிகம் சிந்திக்காமல், ஆனால் சிரிக்க வைக்கும் படங்களைப் போன்றது இது. ரொம்ப யோசிக்க எல்லாம் கூடாது..ஆனால் சிரிப்புக்கு guarantee உண்டு. ஒரு நண்பனின் திருமணத்திருக்கு முன்  bachelor party கொண்டாட Las Vegas செல்லும் ஒரு நண்பர் கூட்டத்திற்கு அங்கு நடக்கும் நிகழ்வுகள் தான் கதை.

(பின்குறிப்பு: என்ன, ஆங்கிலப் படங்களைப் பற்றி, அதுவும் டாகுமெண்டரி போன்ற படங்களைப் பற்றி மட்டும் தான் விமர்சனம் வருமா என்று கேட்காதீங்க..சமீபத்துல நான் பார்த்த தமிழ் படங்களை மறக்க நானே ரொம்ப கஷ்டப் பட்டுட்டு  இருக்கிறேன்..வேணாம்...அழுதிருவேன்..)

Monday, November 23, 2009

கரடி படுத்திய பாடு!

சில வாரங்களுக்கு முன் என் பெண் பள்ளியில் (Kindergarten) இருந்து வெள்ளியன்று திரும்பி வரும்போது ஒரு புதிய, பெரிய பை கொண்டுவந்தாள். என்னடா இது அப்பப்ப ஸ்டிக்கர், சிறு பரிசுகள் (இதெல்லாம் வகுப்பில் நல்ல புள்ளைங்களா இருந்த குடுப்பார்களாம்!) தானே வரும்..இதென்னது என்று பார்த்தால் அதற்குள் ஒரு கரடி பொம்மையும் (buddy bear) அதற்கு போடுவதற்கு 6-7 உடைகளும். சரி ஏதோ விளையாடக் குடுத்து விட்டிருப்பார்கள் என்று நினைத்தால் அங்கே தான் வச்சாங்க ஆப்பு. ஒரு பெரிய சைஸ் கட்டுரை நோட்டும் உள்ளே இருந்தது. சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் கரடியை   நமது குடும்ப உறுப்பினராக பாவித்து என்ன எல்லாம் செய்தோம் என்று கட்டுரை எழுத சொல்லி இருந்தாங்க..சரி தான்.

நாம ஸ்கூல்ல படிக்கும்போதே கட்டுரை எல்லாம் ஒரு விவரமா தான் எழுதுவோம்..ஸ்கூல்-ஐ விட்டு வெளிய போகாமலயே இன்ப சுற்றுலா ன்னு கட்டுரை எழுத சொல்லுவாரு நம்ம தமிழ் ஐயா. நாமளும் கோனார் நோட்ஸ், போன வருஷத்து அண்ணன் நோட்ஸ் ன்னு பார்த்து ஒரு குத்துமதிப்பா சுற்றுலா போய்ட்டு வந்திருவோம். English ல "As I am suffering from fever" ஐயே பல காலம் பயன்படுத்தினோம். இப்படிப்பட்ட சிறப்புடைய  நம்மளை போய் ஒரு முழு பக்கக் கட்டுரை, அதுவும் கரடியை பத்தி, எழுத சொன்னா என்ன பண்ணுறது..

இதுல பெரிய கொடுமை என்னன்னா நமக்கு முன்னாடி யாரெல்லாம் கரடியை குடும்ப உறுப்பினரா கூட்டிட்டு போயிருந்தாங்களோ அவங்க எல்லாம் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு ஒரு பக்கம் பத்தாம பின் பக்கம், extra ஒரு பக்கம் சேர்த்துன்னு கதை கதையா எழுதி நமக்கு  Peer pressure வேற அதிகம் ஆயிருச்சு. அதுலயும் சில பேரு சனிக்கிழமை கரடிக்கு பிடிச்ச (?) sweets (ஏதோ ஒரு வகை cake) எல்லாம் செய்து சாப்பிட்டோம்-ன்னு வேற எழுதிருந்தாங்க. எனக்கு தெரிஞ்சு கரடிக்கு பிடிச்ச ஒரே  sweet தேன் தானே? இப்ப மாத்திட்டாங்களா? இதெல்லாம் வெளிய சொல்லி சத்தமா comment கூட அடிக்க முடியாது..அப்புறம் என் பொண்ணு, "அப்பா, கிண்டல் பண்ணாதே, buddy bear  will be upset" ன்னு சொல்லிட்டா என்னால தாங்கவே முடியாது...அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்...

நல்ல வேளையா அந்த வார இறுதி தான் இங்க halloween. Trick or treat ன்னு ராப்பிச்சை எடுக்க போகும்போது buddy ஐயும் தூக்கிட்டு போய்ட்டு வந்து அதை வச்சே ஒரு பக்கம் (கொஞ்சம் பெரிய எழுத்தா எழுதி, ரெண்டு ரெண்டு line விட்டுன்னு ஒரு மாதிரி இழுத்து கொண்டு வந்திட்டோம்ல..!) எழுதியாச்சு..சும்மா சொல்லக் கூடாது..buddy ஐ கொண்டு போனதுக்கு நல்ல response. நிறைய சாக்லேட் கிடைச்சது..ஒரு பக்கம் எழுதியதுக்கு அடுத்த ஒரு வாரம் எனக்கு சாக்லேட் பஞ்சம் இல்லை?!!! ஹா ஹா...

அதற்கு அடுத்த வாரம் North Carolina வில் இருக்கும் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டு இருக்கும்போது இந்த விஷயத்தை பத்தி சொன்னா, அங்கயும் இதே கதை தானாம். ஹ்ம்ம்....ஒரு குரூப்-ஆ தான் எல்லாரும் கிளம்பிருக்காங்க போல? நாம தான் சூதானமா இருந்துக்கனும், மக்களே..அடுத்த முறை பள்ளியில் இருந்து எதாவது பெரிய பை வந்தா, உடனே கையுல ஒரு band-aid போட்டு பொறுப்பை தள்ளி விட்டுற வேண்டியது தான்..அதுக்கு response-ஆ laundry, vacuum, shopping ன்னு வேலைகள் உங்க தலைல விழுந்தா அதற்கு எருமை நிர்வாகம் பொறுப்பில்லை.

Wednesday, November 11, 2009

எருமை வாழ்க்கை

Life in Buffalo ங்கறதை தான் அப்படி சொல்லிருக்கேன்!!!! இன்றைய செய்திகளில், அமெரிக்காவில் 2009 Top Performing Cities list by Milken Institute (www.milkeninstitute.org) சர்வே வந்திருக்குது. இந்த சர்வேயில் போன வருஷம் 180 வது இடத்தில இருந்த நம்ம எருமை நகரம் இந்த வருஷம் 84 வது இடத்துக்கு வந்திருச்சாம். நல்ல விஷயம் தான். இந்த இடத்துல Buffalo பற்றிய வரலாறு தெரியாதவங்களுக்காக கொஞ்சம் மொக்கை கீழே.

Buffalo நகரத்துக்கு கிட்டத்தட்ட 200 வயசு. அட்லாண்டிக் கடலில் இருந்து அமெரிக்காவின் உள்ளே சரக்கு கப்பல்கள் வருவதற்கு வசதியாக உருவாக்கப்பட்ட (1825) Erie Canal, Buffalo வரலாற்றில் முக்கிய பங்கு வகித்தது. இரும்பு ஆலைகள், நீர்மின் உற்பத்தி (நயாகரா நீர்வீழ்ச்சியில் இருந்து மிக அருகில் உள்ளது Buffalo) எல்லாம் சேர்ந்து 19 ஆம் நூற்றாண்டில் Buffalo வை உலக அரங்கில் ஒரு பெரிய நகரமாய் மாற்றியது (எல்லாம் ஒரு விளம்பரந்தேன்!). கிட்டத்தட்ட 100  வருடங்கள் இப்படி இருந்த நகரம் 1950 களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேய துவங்கியது. இரும்பு ஆலைகள்  இடம் மாறின, Erie Canal போக்குவரத்திற்கு பயன்படுவது குறைந்தது, மக்கள் நகரத்தில் இருந்து புறநகர்கள் நோக்கி செல்ல ஆரம்பித்தது ன்னு நிறைய காரணங்கள் உண்டு. இதற்கு பின் புறநகர்கள் (Amherst, Lancaster போன்றவை இதில் பெரிய ஊர்கள்) வளர்ந்து Buffalo நகரத்தின் மக்கள்தொகை குறைந்து  வேலைவாய்ப்புகள்  எல்லாம் மிகவும் குறைந்தது.

இந்த வரலாற்றின் பின்னணயில் மேலே கூறிய news  முக்கியத்துவம் பெறுகிறது. இப்படி ஒரு வருடத்தில் Buffalo வும் அதை சார்ந்த இடங்களும் (Buffalo-Niagara region) 94 இடங்கள் முன்னேற முக்கிய காரணம் (எனக்கு தெரிஞ்சு) மற்ற அமெரிக்க நகரங்களில் கடந்த 1-2 வருடங்களில் இருந்த பொருளாதார வீழ்ச்சி இங்கு இல்லை..வீட்டு விலையும் இங்கு இன்னமும் கூடிக்கொண்டுதான் இருக்கிறது. எந்த நகரம் எல்லாம் ரொம்ப மேலே போனதோ அவை  எல்லாம் ரொம்ப கீழே விழுந்தன. மிதமான வளர்ச்சி, மிதமான வீட்டு விலை அதிகரிப்பு ன்னு இருந்த நகரங்கள் எல்லாம் இந்த பொருளாதர tsunami யை ஓரளவு எளிதாக தான் எதிர்கொண்டுள்ளன என்று தோன்றுகிறது. இது இந்தியா போன்று அசுரமாக வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஒரு பாடம். கவனிக்க வேண்டியவர்கள் கவனிப்பார்களா?  இன்னொரு முக்கியமான விஷயம்....Top 25 இடங்களில் 8 இடங்கள் Texas மாகாணத்தில் இருக்குது. Texas is where job opportunities are! Texas is the new California?!!! (இப்படி சொன்ன உடனே நிறைய பேரு உணர்ச்சி வசப்படுவாங்க...அதை எல்லாம் comment ல எழுதுங்க!!).

கூடிய சீக்கிரம் Buffalo (முக்கியமா நயாகரா) சுற்றுலா பற்றிய விவரங்கள் ஒரு பதிவு போடுறேன்...அதுவரை வணக்கம்.

Tuesday, November 10, 2009

உதை வாங்கலியோ உதை !!!

இந்த வாரம் சனிகிழமை இரவு (நம்ம local டைம்) 6th ODI மேட்ச் ஆரம்பிக்குதுன்னு ரொம்ப ஆவலுடன் பார்க்க ஆரம்பிச்சேன். ஒரு நண்பர் வீட்டுக்கு போய்ட்டு வந்ததால முதல் 10 ஓவர் பார்க்க முடியலை. ஹ்ம்ம்.. என்னத்த சொல்ல...அதுக்குள்ள நம்ம சிங்கங்கள் 36/5 ல வந்து நின்னுட்டாங்க. Bowlers ஒழுங்கா போட்டா batsmen கவுத்திர்ரானுங்க, batsmen ஒழுங்கா ஆடினா bowlers கவுத்திர்ரானுங்க. இப்படியாக கிரிக்கெட் பார்கிறதை இழுத்து மூடிட்டு கவுந்திட்டேன். அதெப்படி ஆஸ்திரேலியா team குள்ள வர்ற bowlers (Bollinger, Johnson, Hauritz etc. etc.) எல்லாரும் சொதப்பலா ஆரம்பிச்சிட்டு அப்புறம் few series ல தெளிவா ஆட ஆரம்பிச்சிர்ராங்க..நம்ம team bowlers எல்லாம் தெளிவா ஆரம்பிச்சு few series ல super aa சொதப்புறாங்க. (Ishant, Sreesanth, Balaji, R.P. Singh etc. etc.). அது என்னவோ தெரியலை, என்ன மாயமோ தெரியலை..
இப்படி எல்லாம் புலம்பினாலும் அடுத்த series வரும்போதும் (SL series), நாம எல்லாரும் தேசப்பற்றுடன் திரும்ப கிரிக்கெட் பார்க்க உட்கார்ந்திருவோமே..அதை சொல்லணும்? 

Tuesday, November 3, 2009

வணக்கம் அன்பர்களே

வணக்கம் அன்பர்களே,
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி கரையில் பிறந்து 7 வருடங்கள் கடையம், பின்னர் 3 வருடங்கள் கூனியூர் (சேரன்மகாதேவி அருகில்)ன்னு வளர்ந்து, அப்புறம் ஒரு 6 வருடங்கள் காவிரிக்  கரையில் கும்பகோணத்தில்  வாசம் (அப்பாவின் வேலை காரணம்). மீண்டும் 4 வருடங்கள் தென் தமிழ்நாடு (வல்லநாடு - திருநெல்வேலி அருகில், ஆனால் தூத்துக்குடி மாவட்டம்) வந்து கல்லூரிப் படிப்பு.  பின்னர் 2 வருடங்கள் மதுரையில் முதுகலைப் படிப்பு. அத்துடன் தமிழ்நாட்டை விட்டு வெளியே வந்து 6 வருடங்கள் பெங்களூரில் Ph.D.

2000 வருடம் இந்தியாவை விட்டு வெளியே வந்து சில வருடங்கள் Israel நாட்டில் ஆராய்ச்சி, பின்னர் அமெரிக்காவில் Florida வில் சில வருடங்கள் ஆராய்ச்சி எல்லாம் முடித்து கடந்த 3 வருடங்களாக New York மாகாணத்தில் உள்ள Buffalo நகரத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

இன்றிலிருந்து இந்த blog துவக்கம்...swalpa wait maadi....இது எந்த மாதிரி blog ஆ இருக்கும்னு எனக்கும் தெரியாது...பொறுத்திருந்து பார்ப்போமே?!!