Friday, March 19, 2010

இந்தியாவில் இருந்து ஆஸ்காருக்கு!!

இந்தியாவில் இருந்து ஆஸ்காருக்கு - அப்படின்னு படிச்சிட்டு டென்சன் ஆகாதீங்க..நம்ம கிராமத்து நாயகன், முன்னாள்-MP, ராமராஜன் இன்னமும் படத்துல நடிச்சிட்டு இருக்காருன்னு இன்னைக்கு செய்தில பார்த்து அதிர்ச்சி அடைஞ்ச எனக்கு, அந்த படத்து ஸ்டில்ஸ் பார்த்து தான் கொஞ்சம் மனசு ரிலாக்ஸ் ஆச்சுது..வாரம் முழுவதும் ஆபீஸ்ல வேலை (??) பார்த்து களைச்சுப் போன எல்லாருக்கும் ஒரு டென்ஷன் ரிலீவர்!



Saturday, March 13, 2010

பண்டோரா தாண்டி வருவாயா?

சமீபத்துல ஒரு நண்பர் அனுப்பிய நகைச்சுவையான யூ-ட்யுப் ஒலி/ஒளிக் காட்சி! கண்டுகளிக்கவும்!

Thursday, March 11, 2010

கூட்டாஞ்சோறு - 2

1000 க்கும் மேற்பட்ட விசிட்டர்ஸ், 2000 க்கும் மேற்பட்ட ஹிட்ஸ்ன்னு சூப்பர்-ஹிட் திரைப்பட ரேஞ்சுக்கு போய்ட்டு இருந்த நம்ம ப்ளாக்ல ஒரு சின்ன இடைவெளி விழுந்திருச்சு 10 நாளா, மன்னிக்கவும். (சரி சரி, படம் ரிலீஸ் ஆகி 3 நாள் முழுசா ஆகுறதுக்குள்ள  ஈடு இணையற்ற முதலாவது வாரம்ன்னு போஸ்டர் அடிச்சா மட்டும் ஒத்துகிறீங்க!).

                                                          ********************

21 ஆவது குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டி சமீபத்துல வான்கூவர், கனடாவில   நடந்து முடிஞ்சுது நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்காது. நான் இருக்கும் ஊருல (அமெரிக்காவில வடக்கு பக்கம் இருக்கும் எல்லா குளிர் ஊருலயும்?) குளிர்கால ஒலிம்பிக்ஸ்  ஒரு பெரிய விஷயம். நம்ம ஊருல எப்படி கிரிக்கெட் நடக்கும்போது எல்லாரும் மந்திரிச்சு விட்ட மாதிரி திரியுராங்களோ அது மாதிரி இங்க ஐஸ் ஹாக்கி. இந்த வருட ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்ற ஒரு அமெரிக்க ஜோடி நம்ம ஊரு ஹிந்தி பாட்டு இசைக்கு பனிசறுக்கு ஆடியது வித்தியாசமா இருந்தது. விருப்பம் இருக்கிறவங்க அதை யூட்யூப்- ல பார்க்க செல்லுங்கள் இங்கே!!.  பைனல்-ல ஐஸ் ஹாக்கில அமெரிக்கா தோத்துப் போய் அடுத்த நாள் எல்லாம் சோகமா சுத்திட்டு இருந்தது வேற விஷயம்! (பி.கு. இந்தியால இருந்தும் 3 பேரு இந்த ஒலிம்பிக்ஸ்ல கலந்துகிட்டாங்க. அவங்க கலந்துகிட்ட போட்டிகளில் 29, 81, 83 ஆவது இடத்தை பிடிச்சாங்க!). 
                                                          ********************


கமலஹாசனின் 50 வருட கலையுலக சேவையை முன்னிட்டு நடந்த விழாவில ரஜினிகாந்த் அவரைப் பாராட்டி பேசும்போது அமிதாப், ரஜினி, சிரஞ்சீவி, மோகன்லால், விஷ்ணுவர்தன், கமல் எல்லாருமே கலைத்தாயின் குழந்தைகள் என்றும் ஆனால் கமல் தான் ஸ்பெஷல், எப்போதும் கலைத் தாயின் இடுப்புலயே இருப்பாருன்னு சொன்னாராம். நல்ல ஐடியா தான். ரூம் போட்டு யோசிச்சு சொல்லிட்டாரு. அத்தோட விட வேண்டியது தானே. இந்த ஐடியாவை ஒரு பெயிண்டரை வச்சு படமா வரைஞ்சு அதை கமலுக்கு கொடுத்தாராம். நீங்களே அந்த படத்தை கொஞ்சம் பாருங்க. ஆர்ட் ஸ்கூல்-ல பிட் அடிச்சு, அரியர்ஸ் வச்சு பாஸ் பண்ணுரவங்களே இதை விட நல்ல வரைய மாட்டங்க? ஏதோ ஒரு பெயிண்டிங்கை எடுத்து அதுல எல்லார் மூஞ்சியையும் கட் அண்ட் பேஸ்ட் பண்ணிருக்காங்க. இதை வேற கமல் தன் அலுவலகத்துல மாட்டி வச்சு பெருமை பட்டுக்கிறாராம். இதுல காண்டு யாருக்கு - அந்த பெயிண்டருக்கா, ரஜினிக்கா, கமலுக்கான்னு தான் நமக்கு புரிய மாட்டேங்குது!! அந்த பெயிண்டிங்கை நல்ல பாருங்க..எல்லா குழந்தைகளும் சிங்கிள் பீஸ் டிரஸ் போட்டிருக்கும்போது ரஜினிக்கு மட்டும் கழுத்துல எக்ஸ்ட்ரா பிட்டிங் ஸ்டைல் பார்த்தீங்களா? 

                                                          ********************

இதோ இந்த பக்கம் நிக்குறாரே, இவரு யாருன்னு தெரியுதா? தெலுங்கு சூப்பர் ஹீரோ ஜூனியர் NTR. உடம்பெல்லாம் நீல நிற பெயிண்ட் அடிச்சுக்கிட்டு ரொம்ப வருஷமா கடவுள் வேஷம் போட்டுட்டு அப்புறம் முதல்வர் வேஷம் எல்லாம் போட்டுட்டு போய் சேர்ந்தாரே NTR, அவரோட பேரன். இவருக்கு லக்ஷ்மி பிரணதி அப்படிங்கற பெண் உடன் கல்யாணம் ஆகப் போகுதாம். அதுக்கு இவருக்கு 500 கோடி வரதட்சணை குடுக்க போறாங்களாம்!!! இவங்க எல்லாம் 500 கோடிக்கு எத்தனை 0 ன்னு விவரமா தெரிஞ்சுக்கிட்டு தான் பேசுறாங்க போல. 500 கோடின்னா 100 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல. 100 டாலர் கரன்சி நோட்டுகளை ஒரு பெட்டில அடுக்கி வச்சா 1 மில்லியன் வைக்க இவ்ளோ பெரிய பொட்டி வேணுமாம். இதை மாதிரி 100 பொட்டில வச்சா தான் 100 மில்லியன் பணத்தை அடுக்க முடியும். இதுவே இந்திய பணத்துல வைக்கணும்னா இன்னும் பொட்டிங்க நிறைய தேவை ஆச்சுதே! ஹ்ம்ம்..நம்ம எல்லாம் இப்படி பொட்டி கணக்கு மட்டும் தான் பார்க்க முடியும். நிஜ கணக்கு பார்க்கணும்னா அதுக்கெல்லாம் கோங்குரா சட்னி சாப்டுட்டு குத்து பாட்டுக்கு ஆட தெரியனும்? 
                                                          ********************

நாடாளுமன்ற கூட்டத்தில் மகளிர் இட ஒதுக்கீடு விஷயத்தில் வோட்டளிப்பதை விட்டுவிட்டு நெல்லையில் மாநாட்டில் கலந்து கொண்டார் மத்திய அமைச்சர் அழகிரி. ஆமா..அங்க போனா மட்டும் எதுவும் புரிஞ்சிர போகுதாக்கும்? அவன் அவன் மசோதாவை ஆதரிச்சு பேசுறானா எதிர்த்து பேசுறானான்னே நமக்கு புரியாதே. திருநோலி போனாலாது நம்ம மக்கா பேசுறது விளங்கும்லா..என்ன சொல்லுதீய? 
                                                          ********************

இன்றைய quotable quote: "நித்யானந்தருக்கு நான் செய்தது சேவை, பணிவிடை" - நடிகை ரஞ்சிதா.

(பி.கு. நித்யா மேட்டரை விட்டுரணும்னு தான் பார்த்தேன்..முடியலை.!!!)

                                                          ********************

Saturday, February 27, 2010

The Last House on the Left (2009) - விமர்சனம்

1972 வருடம் Wes Craven இயக்கி, இதே பெயரில் வந்த சூப்பர்-ஹிட் திரைப்படத்தின் மறுதயாரிப்பு தான் போன வருடம் வந்திருக்கும் இந்த படம். Wes Craven இப்போது தயாரிப்பாளர்! நேற்று Cinemax சேனலில் இரவு வந்ததைப் பார்த்தேன்.  1972 இல் வெளிவந்த போதே பல பிரச்னைகளை எதிர்கொண்ட படமாம். 1960 இல் Ingmar Bergman இயக்கத்தில் வெளிவந்த Virgin Spring என்ற Swedish படத்தின் தழுவல் தான் 1972 இல் வந்தது. பல நாடுகளில் தணிக்கைக்குழுவிடம்  மாட்டி படாத பாடு பட்டது போல! இளகிய மனது கொண்டவர்கள் இந்த படத்தைப்  பார்க்காமல் இருப்பது நல்லது!

நமக்கு மிகவும் நெருக்காமனவருக்கு தீங்கு விளைவிக்கப்பட்டால் நம்ம எல்லாருக்கும் கோபம் வரும். ஆனால் எவ்வளவு கோபம் வரும், அந்த கோபத்தில் என்னவெல்லாம் செய்யத் துணிவீர்கள் - இது தான் படத்தின் கரு. ஒரு டாக்டர், அவரது மனைவி மற்றும் டீன்-ஏஜ் மகள் மூவரும் விடுமுறைக்காக ஏரிக்கரையில், காட்டிற்குள் இருக்கும் அவர்களது விடுமுறை இல்லத்திற்கு செல்கிறார்கள். அந்த மகள் (Mari) அவர்களது காரை எடுத்துக்கொண்டு தனது நண்பியைப் (Paige) பார்க்க செல்கிறாள். நண்பியுடனும், அவளது நண்பனுடனும் (Justin) அரட்டை, போதைப் பொருள் என்று சென்றுகொண்டு இருக்கும்போது ஜஸ்டினின் தந்தை (Krug) மற்றும் 2 நண்பர்கள் அங்கு வருகின்றனர். இதில் க்ரூக் போலீஸ் கண்காணிப்பில் இருந்து தப்பி வந்தவன். 2 போலீஸ் அதிகாரிகளைக் கொன்று விட்டு அவனைத் தப்பிக்க வைத்தவர்கள் அவனுடன் இருக்கும் நண்பர்கள். இவர்கள் மூவரும் மரி, பைஜ் மற்றும் ஜஸ்டினை துன்புறுத்த ஆரம்பிக்கிறார்கள். மரியின் காரில் அனைவரும் தப்பி செல்ல முயலும் போது விபத்து நேருகிறது. அந்த காட்டில் க்ரூக் மற்றும் அவனது நண்பர்கள் பைஜ்-ஐ சித்திரவதை செய்து கொலை செய்கிறார்கள். மரியைக் கற்பழித்து  சித்திரவதை செய்யும் போது அவள் தப்பி ஓடுகிறாள். குண்டடி பட்டு ஏரியில் விழும் அவள் இறந்து விட்டாள் என்று நினைத்து மூவரும் கிளம்புகிறார்கள். மழை, புயல் என்று இருப்பதால் அருகில் தெரியும் ஒரே வீட்டில் சென்று உதவி கேட்கிறார்கள். அந்த வீட்டில் இருப்பவர்கள் மரியின் பெற்றோர்! மரியின் தந்தை டாக்டர் என்பதால் இவர்களுக்கு முதல்-உதவி செய்து இரவு அங்கு தங்க உதவி புரிகிறார்கள்.

ஆனால், மரி இறக்கவில்லை. கஷ்டப்பட்டு வீட்டை அடையும் அவளைக் காப்பாற்றி, தன் வீட்டில் தங்கி இருக்கும் மூவர் தான் இதற்கு காரணம் என்று பெற்றோர் தெரிந்துகொள்கின்றனர். மரியின் பெற்றோர் அந்த மூவரையும் எப்படி பழி வாங்குகிறார்கள் என்பதே மீதி கதை. சுத்தியலால் மண்டையை உடைப்பது, கத்தியால் வயிற்றைக் கிழிப்பது, தலை வெடித்து சிதறுவது, கற்பழிப்புக் காட்சி என பல கோரக் காட்சிகள் உண்டு. சில பல வெட்டுகளுக்குப் பின்னர் R ரேட்டிங் கொடுக்கப்பட்டு வந்த படம். கோரமானக் கொலை/வன்முறைக் காட்சிகள் உங்களுக்குப் பிடிக்கும் என்றால் இந்தப் படமும் பிடிக்கும். அதைத் தவிர வித்தியாசமாக எதுவுமில்லை. ஜஸ்ட் பாஸ் தான் - அதுவும் suspense-ஐ கடைசி வரை கொண்டு சென்றதால்!

Thursday, February 25, 2010

இரு சதம் அடித்த திருமகன்!


சச்சின் டெண்டுல்கர்..இந்த பெயர் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை துள்ளிக்குதிக்கவும் எரிச்சல் அடையவும் வைக்கும் சக்தி வாய்ந்தது. 90 களில் சச்சின் அவுட் ஆயாச்சு என்றால் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி விட்டு எழுந்து செல்பவர்கள் இருந்தார்கள். 20 வருடங்களாக ஒரு துறையில் உலகத்தின் டாப் வீரராக  இருப்பது எளிதல்ல. கடந்த 10-15 வருடங்களில் இந்தியாவில் ஒரு நாள் போட்டிகளில் ஆர்வம் அதிகரித்ததிற்கு  சச்சினின் விளையாட்டும்  ஒன்று. உலகின் முதன்முறையாக ஒரு நாள் போட்டிகளில் 200 அடித்த  வீரர் என்று நேற்று சச்சின் சாதனை புரிந்துள்ளார். இந்த நேரத்தில் அவருக்கு வாழ்த்துக்கள் !!! 

Sunday, February 21, 2010

அலை கடலென திரண்டு வாரீர்!



வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையின் (FETNA) விழா இந்த வருடம் கனக்டிகட் மாகாணத்தில் உள்ள வாட்டர்பரி என்ற ஊரில் நடைபெறுகிறது என்று தெரிகிறது. வழக்கம்போல் ஜூலை 4 (அமெரிக்க சுதந்திர தினம்) விடுமுறையை ஒட்டி 3 நாட்கள் பெரிய விழாவாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது என்று FETNA வலைப் பக்கத்தில் இருந்தும் (FETNA) சக பதிவர் ச்சின்னப் பையனின் வலைப் பக்கத்தில் (பூச்சாண்டி) இருந்தும் தெரிந்து கொண்டேன்.

நான் இதுவரை இந்த வருடாந்திர விழாவிற்கு சென்றதில்லை. சென்ற வருடம் செல்ல வேண்டும் என்று சில நண்பர்களுடன் பேசினோம். ஆனால், அது ஜார்ஜியா  மாகாணத்தில் உள்ள அட்லாண்டா நகரத்தில் நடந்தது. இங்கு இருந்து அது வெகு தொலைவு என்பதால் கைகூடவில்லை. இந்த வருடம் நமக்குப் பக்கத்தில் (6 மணி நேர கார் பயணம் தான்) தான் நடைபெறுவதால் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறோம்.

வட அமெரிக்காவில் தமிழ் மக்களைப் பார்த்து பழகவும், தமிழ் நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கவும் இந்த விழா ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்று நினைக்கிறேன். இந்த வருட விழாவிற்கு இயக்குனர் பாரதிராஜா, நடிகர் விக்ரம், நடிகர் பார்த்திபன், நடிகர் வடிவேலு, நடிகர் சூர்யா, இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், கவிஞர் தாமரை போன்ற தமிழக பிரபலங்கள் வருகையும்  தெருக்கூத்து,  குழந்தைகள் நிகழ்ச்சிகள் போன்றவையும் ஏற்பாடு செய்யப்படுகின்றது என்று தெரிகிறது.

சுத்துப் பட்டு 18 மாகாணத்துல  இருக்கும் சனங்க எல்லாரும் வண்டி கட்டிட்டு வந்து ஆதரவு தருமாறுக் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். நம்ம ஊருப் (Buffalo, NY ) பக்கத்துல இருந்து யாராவது  போறதுக்கு விருப்பமா இருந்தீங்கன்னா சொல்லுங்க. ஒரு நாளைக்கு 500 ரூபாய், பிரியாணி பொட்டலம், குவார்டர் சரக்கு எல்லாம் கொடுத்து லாரியில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்!!

Thursday, February 18, 2010

கூட்டாஞ்சோறு 1 !!

உலக ப்ளாக் வரலாற்றிலே யாருமே செய்யாத புதுமை - அடிக்கடி நாட்டு நடப்பு விஷயங்களைக் கலவையா எழுதுறது!!! (ஹி..ஹி...)!!! நமக்கும் அந்த வியாதி வந்திருச்சுன்னு சொல்லி இந்த கூட்டாஞ்சோறு பதிவுகளை ஆரம்பிச்சு வைக்கிறேன். கூட்டாஞ்சோறு திருநெல்வேலி மக்களின் வாழ்வில் முக்கியமான ஒன்று. கூட்டாஞ்சோறு கட்டிக்கிட்டு தாமிரபரணி ஆத்துலையோ, குற்றாலம், பாபநாசம், மனிமுத்தார் நீர்வீழ்ச்சிகளிலோ போய் ஒரு கட்டு கட்டிட்டு வர்றது அனைவருக்கும் பிடித்த ஒன்று! அதுனால அந்த பெயர்லயே ஆரம்பிக்கிறேன். (கூட்டாஞ்சோறு, திருநெல்வேலி முறையில் செய்ய ரெசிபி வேணும்னா சொல்லுங்க..அதையும் போட்ருவோம்!!!).

                                                          ********************
மரியாதை நிமித்தமாக  வியாழன் அன்று கலைஞரை சந்தித்தார் நடிகர் அஜித். அதான் போன வாரம் பாராட்டு விழாவில மரியாதை செலுத்திருப்பாரே இப்ப என்ன புதுசா? ஒரு வேளை அவரு அங்க பேசிய பேச்சுக்கு அந்த பக்கத்துல இருந்து வந்த பதில் "மரியாதையை" தாங்க முடியலையோ? ஹி...ஹி....அதுக்குள்ள இவர் தான்  ஆம்பளை, தன்மானத்  தமிழன், தைரியமா பேசுற ஒரே நடிகர் ன்னு ஓவரா பில்ட்-அப் குடுத்திட்டாங்க எல்லாரும்?!!! அப்புறம் கட்டின வீடு, தோட்டம் எல்லாம் புறம்போக்கு நிலத்துல கட்டினதுன்னு  நாளைக்கு நோட்டீஸ் வந்தா அவரு என்ன பண்ணுவாரு?
                                                        ********************
தமிழ் நாட்டில் கடந்த வருடம் சாலை விபத்தில் 13,000  பேர் இறந்தனர் - ஆனந்த விகடன் செய்தி. அமெரிக்காவில சராசரியா வருடத்திற்கு 50,000 பேர் சாலை விபத்தில் இறக்கின்றனர். தமிழக மக்கள் தொகை - 6.5 கோடி. அமெரிக்கா மக்கள் தொகை - 30 கோடி. கூட்டிக்கழிச்சு பார்த்தா தமிழகம் அமெரிக்காவை தாண்டிருச்சு!! அடுத்த தேர்தல்ல இனிமேல் மயிலாடுதுறையை துபாய் ஆக்குவேன், மதுரையை சிங்கப்பூர் ஆக்குவேன்னு எல்லாம் உதார் விட முடியாது..நாம தான் அமெரிக்காவையே மிஞ்சிட்டமே!

                                                        ********************
தென் ஆப்ரிக்கா  உடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ததின் மூலம் இந்தியா ICC தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது...வாழ்த்துக்கள். என்னத்த 20-20 மாதிரி காட்டுஅடி கந்தசாமிங்க விளையாட்டு வந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட் - தி பெஸ்ட் கிரிக்கெட் தான்! 
                                                        ********************
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. A. K. அந்தோணி கூறியது: எந்த ஒரு நாட்டின் ஒரு அங்குல இடத்தை கூட இந்தியா ஆக்கிரமிக்காது, அதுபோல இந்தியாவின் அங்குல இடத்தை எந்த நாடுகளும் ஆக்கிரமிக்க இந்தியா அனுமதிக்காது!! இவருக்கு அம்னீஷியாவா? இல்லை சீனாவும் நம்ம நாடுன்னு நினைச்சுக்கிறாரா? 
                                                        ********************
திருப்பதியில் சர்வதேச தரத்தில் விமான நிலையம்: செய்தி. லேண்ட் ஆகும்போதும் டேக்-ஆப் செய்யும்போதும் பைலட் கோவிந்தா! கோவிந்தா!! ன்னு சொல்லாம இருந்த சரி தான்!!
                                                        ********************
இந்த வார quotable quote: "என் மேல யாரும் கை வைக்க முடியாது!! நான் என்ன செய்யுறேன்னு தெரிஞ்சி தான் செய்யுறேன்" - நயன்தாரா. (பி.கு. நயன்தாரா பத்தி செய்தி போட்டுட்டு போட்டோ போடலேன்னா நம்ம ரசிகர்கள் ரெம்ப டென்சன் ஆயிருவாங்களே..அதுனால ஒரு படம் கீழே!!)
                                                         ********************