Showing posts with label Food. Show all posts
Showing posts with label Food. Show all posts

Sunday, January 10, 2010

சுண்டக் கஞ்சியும் தித்திப்புச் சோறும்!!!

சென்னைச் சிங்கம் ஒன்று இந்த  எருமைக்காக எழுதியது..நன்றி நண்பரே!
------------------------------------------------------------------------
வணக்கமுங்க,  நான் தான் போதை குமார்!!!......இனிமே அடிக்கடி  உங்கள பல போதை சமாச்சாரங்களோட  சந்திக்க  போறேன் ( ஆசிரியர் வாய்ப்பளித்தால்!).  ஒவ்வொரு மனுஷனுக்கும் ஏதோ ஒரு போதை அப்பப்ப தேவை படுது.... நாகர்கோயில்ல ஜிஞ்சர் , வட ஆற்காடு மாவட்டத்துல மது கசாயம், கேரள பக்கம் சுட சுட சாராயம்.... இப்படி பல வகையான சோம பானங்கள் உண்டு... அது போல சென்னம்மா பட்டணத்துக்கும் ஒரு விசேஷமான சோம பானம் உண்டு அது தான் நம்ம சுண்டக்  கஞ்சிங்க...

முதல சுண்ட கஞ்சி எப்படி செய்றாங்கன்னு பார்க்கலாம்.....  நல்ல உயர் ரக அரிசிய (ரேஷன் அரிசி மாதிரி ன்னு வச்சுகோங்களேன்..) நல்ல வடிச்சிட்டு அத ஒரு வெள்ளை துணியல போட்டு ஒரு சோறு கூட இன்னொரு  சோறு ஒட்டாம உலர்த்தனும்.. அப்புறம் அத ஒரு மண் பானையில போட்டு அதுக்குள்ள போதை மருந்து  கொஞ்சம்  ஊத்தி ( போதை  மருந்து பேரு தெரியலைங்க)   அந்த வெள்ளை துணியால் வேடு கட்டி நல்ல பள்ளம் தோண்டி அத கடல்  மண்ணுக்குள்ள பொதைச்சிடுவாங்க.. அப்புறம் அத  ஒரு பத்து பதினஞ்சு நாலு கழிச்சு  தோண்டி எடுக்கணும் அப்புறமா அந்த வெள்ளை துணிய அவுத்து பார்த்த அந்த சோறு நல்லா  நொதி வந்து பொங்கி இருக்கும் ....அப்போ மேலாவ   இருக்க  அந்த  நொதிஞ்ச சோறு எடுத்து தனியா  வைப்பாங்க,  அது பேரு தித்திப்பு சோறு...

இது தாங்க  ரொம்ப விசேஷமானது ஏன்னா  அதுல தான் போதையே  இருக்கு... அப்புறம் உள்ள இருக்குற  சோறுல தண்ணியே  ஊத்தி கலக்கிட்டு அப்புறம் அந்த தித்திப்பு  சோறையும் போட்டு நல்ல பிசையணும்..பிறகு  அந்த கலக்குன   தண்ணிய  ஒரு சொம்புல குடிச்சா ரொம்ப பிரமாதமா இருக்கும் ..... இதுக்கு  தொட்டுக்க எலி பூச்சியும், நண்டு மசாலாவும், வறுத்த மீனும் சாப்பிடணும்..... ரொம்ப நல்லா  இருக்கும்... (சொல்லும் போதே நாக்குல தண்ணி தட்டுதுங்க).

இந்த சுண்ட கஞ்சி  தாங்க பல பேருக்கு காலை நாஷ்டா....... இது உடம்புக்கு நல்லா குளிர்ச்சி தரும்.... ஒரு  சொம்பு சுண்ட  கஞ்சி இரண்டு  இளநீருக்கு சமம்னு  இங்க இருக்க பல அனுபவசாலிங்க சொல்லுவாங்க....

நாங்க கல்லூரில  படிக்கும் போது  அல்லா  சனிக்கிழமையும் காலைல பெசன்ட்நகர் பீச்க்கு போவோம்
அங்கே தான் அது ரொம்ப  அது விசேஷம் ... சில சமயங்கள்ல நாங்க காசிமேடு , நடுக்குப்பம், டுமிங் குப்பம், சீனிவாசபுரம் போன்ற இடங்களுக்கும்  போவோம்....  இதமான அந்த கடல் அலை ஒசையோட,  அந்த கருவாட்டு வாசனையோட, பசபசப்பான அந்த உப்பு காத்தோட, ஒரு அழகான ஓலை குடிசைல, கோணி துணி திரைல உட்கார்ந்து பக்கிட் பக்கிடா  குடிக்கிற  சுகமே  தனி  தாங்க.... இன்னா...நான் சொல்லுறது கரீட்டு தானே!?

Thursday, January 7, 2010

சொதி சாப்பிட வாரியளா?

(முன்குறிப்பு: 2 நாளைக்கு முன்னாடி சொதி செய்முறை இங்க போட்ட ராசி, இன்று நம்ம வீட்டுல மதியம் சொதி! அதன் படங்கள் இங்கே - சொதி, உருளை பொடிமாஸ் மற்றும் இஞ்சி பச்சடி!)..இனிமேல் படிங்க!


திருநெல்வேலியில் அல்வாவிற்கு அடுத்த படியா (நாமளே சொல்லிக்க வேண்டியது தானே!) "உலகப் புகழ்" பெற்ற சைவ உணவு  சொதி எனப்படும் தேங்காய்ப்பால் குழம்பு ன்னு சொல்லலாம். இது சூடான சாதத்துடனும் இடியாப்பம் (சேவை) , ஆப்பம் உடனும் நன்றாக இருக்கும். இதைப் பற்றி,  திருநெல்வேலித் தமிழில் அருமையாக எழுதி வரும்  வேணுவனம்சுகா அவரது பதிவுகளில் ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார். அதைப் படிக்க இங்கே செல்லவும்.

தேங்காய்ப் பாலில் செய்யப் படுவதால் அதனுடன் எப்பொழுதும் இஞ்சிப் பச்சடியும் பரிமாறப் படும். இது போக இதற்கு நல்ல சைடு டிஷ் உருளைக் கிழங்கு சிப்ஸ்..அதற்காக $1, $2 க்கு வால்மார்ட்டில் கிடைக்கும் சிப்ஸ் ன்னு நினைச்சிராதீங்க..வீட்டில் செய்யப்படும் சூடான, சுவையான சிப்ஸ்! அது செய்வது அவ்வளவு சுலபம் இல்லாததால் அதற்கு மாற்றாக உருளை காரப் பொடிமாஸ் செய்வது வழக்கம். சொதி  செய்முறை விளக்கம் (உபயம் எனது மனைவி!) இங்கே!
சொதி செய்ய:  
தேவையானவை:

தேங்காய்ப் பால் - ஒரு முழு தேங்காயில் இருந்து (அல்லது) ஒரு can தேங்காய்ப்  பால் (500 ml போல)
காரட், உருளை, முருங்கைக்காய் - ஒவ்வொன்றும் ஒன்று
முந்திரிப் பருப்பு - 15-25
வெள்ளைப் பூண்டு - 10 (இதைப் பிடிக்காது என்றால் விட்டு விடலாம்)
இஞ்சிச் சாறு - 100 ml போல
எலுமிச்சைச் சாறு - 4 ஸ்பூன் அளவில்
பயத்தம்பருப்பு (moong dal) - 2 ஸ்பூன் அளவில் (வேக வைத்தது)
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் குறைந்த அளவில் நீர் வைத்து அனைத்து காய்கறிகள் (1" அளவில் நறுக்கியது) மற்றும்  முந்திரிப் பருப்பை (பூண்டு சேர்ப்பதாக இருந்தால் அதையும்) வேக வைத்துக் கொள்ளவும். இதனுடன் தேங்காய்ப் பாலையும் சேர்த்து கொதிக்கும் முன் (5 நிமிடம் போல) வேகவைத்த பயத்தம்பருப்பை சேர்த்து இறக்கி விடவும். சற்று ஆறியவுடன் இஞ்சிச் சாறு, எலுமிச்சைச் சாறு மற்றும் உப்பு சேர்க்கவும். (கவனிக்க: தேங்காய்ப் பால் கொதித்தாலோ, இஞ்சி/எலுமிச்சைச் சாறுகள் சூட்டுடன் சேர்க்கப் பட்டாலோ, குழம்பு திரிந்து தயிர் போல் ஆகி விடும்).


இஞ்சிப் பச்சடி:
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அதில்  பொடியாக நறுக்கப் பட்ட இஞ்சி (100 கிராம் அளவில்), சிறிது பெருங்காயம், 3 மிளகாய் வத்தல் போன்றவற்றை வதக்கிக் கொள்ளவும். நன்கு வதங்கிய பிறகு, இவற்றை சிறிதளவு நீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை போன்றவற்றை வாணலியில் தாளித்து விட்டு, அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதித்த உடன் இறக்கலாம்.

செய்து பார்த்து விட்டு மறக்காம இங்க வந்து சொல்லுங்க..!!!

பி.கு: சொதியில் இஞ்சி தவிர வேறு காரம் எதுவும் இல்லாததால், இஞ்சிப் பச்சடியை நன்கு காரமாக செய்து கொள்ளவது நல்லது!
பி.பி.கு: முந்திரிப் பருப்பு, தேங்காய்ப் பால் எல்லாம் போட்டால் அது dessert மாதிரி அல்லவா இருக்கும், நீ குழம்பு ன்னு சொல்லுறயே ன்னு ஒரு கும்பல்  அடிக்கடி எங்கிட்ட கேள்வி கேட்பாங்க..அவங்களும் செய்து பார்த்து சொல்லலாம்...:-)