Friday, April 30, 2010

Amreeka (2009) - விமர்சனம்!!

இந்த வார இறுதியுல ஒரு feel good factor படம் பார்க்கணும்னு ஆசைப் படுறீங்களா? கண்டிப்பா இந்த அம்ரீகா படத்தைப் பாருங்க. முனா (Muna) என்ற பெண்ணும் அவரது டீன்-ஏஜ் மகனும் (Fadi) பாலஸ்தீனத்தில் இருந்து அமெரிக்காவிற்கு வந்து எப்படி இங்கு வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள் என்பது தான் கதை. விவாகரத்து, ஒரே மாதிரியான வேலை, தினமும் வேலைக்கும் வீட்டிற்க்கும் இடையே செல்வதற்கே இஸ்ரேலிய ராணுவத்தின் கெடுபிடிகள் என்று மன உளைச்சல்களில் இருக்கும் முனாவிற்கு திடீர் என்று அமெரிக்கா செல்ல வாய்ப்பு கிடைக்கிறது. தாய், சகோதரனை எல்லாம் விட்டு விட்டு  அமெரிக்கா செல்ல வேண்டுமா என்று  நினைப்பு ஒரு புறம், தனது மகனுக்கு பாலஸ்தீனிய யுத்த பூமியில் எதுவும் நடந்துவிடுமோ என்ற பதைபதைப்பு என்று இருக்கும்போது அவரது மகன் பிடிவாதமாக அமெரிக்கா செல்லுவோம் என்று கூற ஆரம்பிக்கிறது அவர்களது பயணம்.

அமெரிக்காவில் வந்து இறங்கிய உடனேயே பிரச்னை கஸ்டம்ஸ் அதிகாரிகள் வடிவில் வருகிறது. சிகாகோவிற்கு அருகில் இருக்கும் முனாவின் சகோதரி குடும்பத்துடன் தங்குகிறார்கள். முதல் முதல் நாம் வெளியூரோ, வெளி நாட்டிற்கோ செல்லும் போது நமக்கு ஏற்படும் அனைத்து சங்கடங்களும் இவர்களுக்கும் ஏற்படுகிறது. அதுவும் Fadi க்கு பள்ளியில் ஏற்படும் தொந்தரவுகள் அதிகம். இதை எல்லாம் எதிர்கொண்டு எப்படி வாழ்க்கையைக் கொண்டு செல்கிறார்கள் என்பது தான் கதை. கதைப் படிப்பதற்கு மிக எளியதாக தோன்றினாலும் படத்தை தூக்கிப் பிடிக்கும் விஷயங்கள் - படத்தில் யாருமே கெட்டவர்கள் இல்லை, அதை விட பெரிய விஷயம், முனாவின் கேரக்டர் செதுக்கப் பட்டிருக்கும் விதம். மிக மிக பாசிடிவ் ஆக எல்லாப் பிரச்னைகளையும் சமாளிப்பதாகட்டும், வெகுளித்தனமாக அமெரிக்காவில் நடந்து கொள்வதாகட்டும் நம்மைக் கட்டிப் போடும் பாத்திரம்.

நம்ம ஊரு கதாநாயகிகளிடம் வெகுளித்தனமாகன்னு சொல்லிற கூடாது..எல்லாம் அரை லூசு மாதிரி பேசிகிட்டு (டிரஸ்சை மட்டும் கிழிக்கிறது கிடையாது? அதைத் தான் பாட்டுக் காட்சிகளில்  கிழிச்சு விட்டுக்குராங்களே!!) திரியுமே..அது போல இல்லாம, வெகுளித்தனத்தையும் அடக்கி வாசிச்சிருக்கும் நடிப்பு. அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டர்வர்கள் எதிர்கொள்ளும் கலாசாரப் பாகுபாடுகள், அராபிய மக்கள் இங்கு எதிர்கொள்ளும் பிரச்சனைகள் போன்ற சீரியஸ் ஆன விஷயங்களை எல்லாம் மெல்லிய நகைச்சுவையோடு யாரையும் குற்றம் சாட்டாமல் எடுத்திருக்கும் விதம் தான் இந்தப் படத்திற்கு feel good factor! Netflix Instant View ல இப்ப இந்தப் படம் கிடைக்கிறது.
மதிப்பெண்கள்: 85/100

2 comments:

Kolipaiyan said...

Good review. Have to watch....

மரா said...

நல்ல படம்.கொஞ்சமாய்,நிறைவாய் சொல்லியிருக்கிறீர்கள்.நன்றி.