Tuesday, April 20, 2010

அழுகாச்சியா வருது!! ( திரைப்பட விமர்சனங்கள்)

கொஞ்ச காலமா காணாமப் போயிட்டதுக்கு மன்னிக்கவும். சமீபத்துல பார்த்த மூன்று திரைப்பட விமர்சனங்களுடன் மீண்டும் ஆஜர்! மூன்று படத்துக்குமே ஒரு லிங்க் இருக்குதுன்னு தோணியது. அது என்னனு கடைசியில் பார்ப்போம்!
1. Precious (2009) 


இந்த வருட ஆஸ்கார்ல 2 விருதுகளைப் (சிறந்த துணை நடிகை, திரைக்கதை) பெற்ற படம். நியூ யார்க் நகரத்தில் ஆப்ரிக்க-அமெரிக்க இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான Harlem இல் வசிக்கும் Precious Jones என்ற 16 வயது பெண்ணைப் பற்றிய கதை. சிறு வயதிலயே உடல், மனரீதியான கொடுமைகள் எல்லாம் அவளுக்கு நடக்கிறது - அதுவும் பெற்றோர்களிடம் இருந்தே! 16 வயதிலேயே 2 ஆவது முறை கர்ப்பம் அடைகிறாள். ஏற்கனவே ஒரு மனவளர்ச்சி குறைந்த குழந்தை வேறு இருக்கிறது. இந்த இரண்டிற்கும் காரணம் - அவளது அப்பா! அம்மாவிற்கும் தெரிந்தே இந்த கொடுமைகள் நடக்கிறது. தாயும் அவள் பங்குக்கு சித்திரவதை செய்கிறாள். இவள் மீண்டும் கர்ப்பம் என்று தெரிந்ததும் பள்ளியில் இருந்து வேறு ஒரு சீர்திருத்த பள்ளிக்கு மாற்றப் படுகிறாள். அங்கு இருக்கும் ஆசிரியை, சக தோழிகள் உதவியுடன் வாழ்கையை சரி செய்து கல்வியில் முன்னேற நினைக்கும் போது அடுத்த பலத்த அடி. என்ன அது, அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று படத்தைப்  பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். Precious ஆக நடித்திருக்கும் Gabourey Sidibe (அறிமுக படமாம்!), தாயாக நடித்திருக்கும் Mo'Nique இருவரும் மிக அருமையாக நடித்திருக்கிறார்கள். இளகிய மனசு இல்லாத எல்லாரும் பார்க்க வேண்டிய படம். 
மதிப்பெண்கள்: 80%.
2. Stoning of Soraya M. (2008)


ஈரானில் ஒரு பெண்ணிற்கு இழைக்கப்படும் கொடுமையைப் பற்றிய படம். ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 1994 இல் வெளிவந்த புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டு பல திரைப்பட விழாக்களில் பெரிதும் பேசப்பட்ட படம். ஈரானில் இஸ்லாமிய சட்டங்கள் (ஷரியா) வந்த பிறகு பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போனது, முன்னாள் திருடர்கள் எல்லாம் மத குரு ஆகி ஏமாத்துவது என்று பல விஷயங்களை தொட்டுச் செல்லும் படம். சொராயா என்ற 4 குழந்தைகளின் அம்மாவை அவளது கணவன் வெறுத்து துன்புறுத்துகிறான். காரணம் - அவளை ஒழித்து கட்டிவிட்டு ஒரு 14 வயது பெண்ணை மணக்க அவன் போட்டிருக்கும் திட்டம்! லோக்கல் மதகுருவை தன் கைக்குள் போட்டுகொண்டு தன் மனைவி தனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக குற்றம் சாட்டுகிறான். இஸ்லாமிய சட்டம் படி அந்தப் பெண்ணிற்கு மரணதண்டனை, அதுவும் ஊருக்கு நடுவில் கல்லால் அடித்துக் கொல்லுதல், வழங்கப்படுகிறது. அவளுக்கு என்ன நடந்தது என்று படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த உண்மைச் சம்பவம் எப்படி வெளி உலகிற்கு தெரிந்தது என்பது ஒரு த்ரில்லர் நாவலுக்கு இணையானது. 
மதிப்பெண்கள்: 85%.
3. அங்காடித் தெரு (2010)
நம்ம ஊரு படம்! வெயில் படம் எடுத்த வசந்த பாலன் மீண்டும் ஒரு முறை தென்தமிழ் நாட்டுல இருக்கும் மக்களில் வாழ்க்கையைப் பற்றி எடுத்திருக்கும் படம். முந்திய இரண்டு படங்களைப் போல இதிலும் பெண்களுக்கு (கூடவே ஆண்கள்!) இழைக்கப்படும் கொடுமைகள் உண்டு!. சமுதாயத்துல பின் தங்கி இருக்கும் சிறுவர்/சிறுமிகளை சென்னைக்கு வேலைக்காக அழைத்து வந்து ரங்கநாதன் தெருவில் இருக்கும் "ஒரு" கடையில் அவர்களைப் படுத்தும் பாடு பற்றியது. மகேஷ், அஞ்சலி மற்றும் பாண்டி அருமையாக நடித்திருக்கிறார்கள். வெகு நாட்களுக்கு பிறகு உண்மை நிகழ்வுகளை வைத்து எடுத்த படம். ஹீரோ ஷூக்கு கீழே கேமரா, 50 பேரை அஞ்சு நிமிஷத்துக்குள்ள ஆசுபத்திரிக்கு அனுப்புற ஹீரோ, ஒரு நாலு தடவை சுவிட்சர்லாந்த், நியுசிலாந்து, ஆஸ்திரேலியா, எகிப்து ன்னு போய் மொக்கைப் பாட்டு எல்லாம் இல்லாம படம் இருந்தாலே நமக்கு பெரிய நிம்மதி கிடைக்குதோ? இப்படி ஒரு நல்ல படம் எடுத்துவிட்டு அதில் தமிழ் சினிமாவிற்கு தேவையான ஜிகினா டிரஸ் கனவு டூயட் எல்லாம் தேவையா? ஹீரோவும் ஹீரோயினும் பூட்டிய கடைக்குள் மாட்டி விட்டார்களே என்று நாம் பதைபதைக்கும் சமயத்தில் கனவு டூயட்! அங்கே தான் படைப்பாளி செத்துப் போய் வியாபாரி தெரிகிறாரோ? இது போன்ற சீரியஸ் சினிமாவில் காமிக் ரிலீப் தேவை தான், அதுக்காக "கேஸ்" ட்ரபுள் தான் கிடைத்ததா?  இது போல ஓட்டைகள் இருந்தாலும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். 
மதிப்பெண்கள்: 70%


3 படமுமே ஒரு மாதிரி டார்க் தான். ஆனால், அங்காடி தெருவில் தான் ஏகப்பட்ட சோகம். படத்தில் வரும் 1-2 பேரைத் தவிர மத்தவங்க எல்லாரும் கெட்டவங்க, இல்லை வக்கிர புத்தி படைத்தவர்கள். படம் பார்க்கும் போதே அடுத்த சீன்ல பாரு, ஹீரோக்கு கண்ணு போயிரும் என்கிற மாதிரி கமெண்ட் அடிக்க தோணுது..அவ்வளவு சோகம்! மூணு படமுமே சமூகத்தில் மனிதர்களுக்கு நடக்கும் கொடுமைகளைப் பற்றியது. 3 படத்தையும் ஒரே நாள்ல பார்த்தீங்கன்னா, அடுத்த ஒரு வாரத்துக்கு அழுகாச்சியா வந்துகிட்டே இருக்கும். அந்த அளவுக்கு சோகத்தை தாங்குற தைரியம் இல்லையா, பேசாம இன்னும் ஒரு வாரம் வெயிட் பண்ணுங்க..சுறா வருதாம்! (போஸ்டரை பார்த்தே இன்னும் சிரிச்சிட்டு இருக்கேன் - பஞ்ச் லைன்ஐ பாருங்க.."சமாதானம் போக நான் புறா இல்லைடா, சுறா!!". ரூம் போட்டு உண்மையிலயே யோசிக்கிறாங்கப்பா!). 

4 comments:

Cable Sankar said...

:)

markabandhu said...

mark potta maakkaanukku O (as in ottagam.. not jeeero maark!) poduvome

மயில்ராவணன் said...

முதல் இரண்டும் நல்ல பகிர்வு தல. வாழ்த்துக்கள்.

அருமையான எருமை said...

நன்றி கேபிள், மார்கபந்து மற்றும் மயில். இந்த பக்கமும் வந்து உங்கள் கருத்துகளைத் தெரிவிச்சதுக்கு.