Saturday, February 27, 2010

The Last House on the Left (2009) - விமர்சனம்

1972 வருடம் Wes Craven இயக்கி, இதே பெயரில் வந்த சூப்பர்-ஹிட் திரைப்படத்தின் மறுதயாரிப்பு தான் போன வருடம் வந்திருக்கும் இந்த படம். Wes Craven இப்போது தயாரிப்பாளர்! நேற்று Cinemax சேனலில் இரவு வந்ததைப் பார்த்தேன்.  1972 இல் வெளிவந்த போதே பல பிரச்னைகளை எதிர்கொண்ட படமாம். 1960 இல் Ingmar Bergman இயக்கத்தில் வெளிவந்த Virgin Spring என்ற Swedish படத்தின் தழுவல் தான் 1972 இல் வந்தது. பல நாடுகளில் தணிக்கைக்குழுவிடம்  மாட்டி படாத பாடு பட்டது போல! இளகிய மனது கொண்டவர்கள் இந்த படத்தைப்  பார்க்காமல் இருப்பது நல்லது!

நமக்கு மிகவும் நெருக்காமனவருக்கு தீங்கு விளைவிக்கப்பட்டால் நம்ம எல்லாருக்கும் கோபம் வரும். ஆனால் எவ்வளவு கோபம் வரும், அந்த கோபத்தில் என்னவெல்லாம் செய்யத் துணிவீர்கள் - இது தான் படத்தின் கரு. ஒரு டாக்டர், அவரது மனைவி மற்றும் டீன்-ஏஜ் மகள் மூவரும் விடுமுறைக்காக ஏரிக்கரையில், காட்டிற்குள் இருக்கும் அவர்களது விடுமுறை இல்லத்திற்கு செல்கிறார்கள். அந்த மகள் (Mari) அவர்களது காரை எடுத்துக்கொண்டு தனது நண்பியைப் (Paige) பார்க்க செல்கிறாள். நண்பியுடனும், அவளது நண்பனுடனும் (Justin) அரட்டை, போதைப் பொருள் என்று சென்றுகொண்டு இருக்கும்போது ஜஸ்டினின் தந்தை (Krug) மற்றும் 2 நண்பர்கள் அங்கு வருகின்றனர். இதில் க்ரூக் போலீஸ் கண்காணிப்பில் இருந்து தப்பி வந்தவன். 2 போலீஸ் அதிகாரிகளைக் கொன்று விட்டு அவனைத் தப்பிக்க வைத்தவர்கள் அவனுடன் இருக்கும் நண்பர்கள். இவர்கள் மூவரும் மரி, பைஜ் மற்றும் ஜஸ்டினை துன்புறுத்த ஆரம்பிக்கிறார்கள். மரியின் காரில் அனைவரும் தப்பி செல்ல முயலும் போது விபத்து நேருகிறது. அந்த காட்டில் க்ரூக் மற்றும் அவனது நண்பர்கள் பைஜ்-ஐ சித்திரவதை செய்து கொலை செய்கிறார்கள். மரியைக் கற்பழித்து  சித்திரவதை செய்யும் போது அவள் தப்பி ஓடுகிறாள். குண்டடி பட்டு ஏரியில் விழும் அவள் இறந்து விட்டாள் என்று நினைத்து மூவரும் கிளம்புகிறார்கள். மழை, புயல் என்று இருப்பதால் அருகில் தெரியும் ஒரே வீட்டில் சென்று உதவி கேட்கிறார்கள். அந்த வீட்டில் இருப்பவர்கள் மரியின் பெற்றோர்! மரியின் தந்தை டாக்டர் என்பதால் இவர்களுக்கு முதல்-உதவி செய்து இரவு அங்கு தங்க உதவி புரிகிறார்கள்.

ஆனால், மரி இறக்கவில்லை. கஷ்டப்பட்டு வீட்டை அடையும் அவளைக் காப்பாற்றி, தன் வீட்டில் தங்கி இருக்கும் மூவர் தான் இதற்கு காரணம் என்று பெற்றோர் தெரிந்துகொள்கின்றனர். மரியின் பெற்றோர் அந்த மூவரையும் எப்படி பழி வாங்குகிறார்கள் என்பதே மீதி கதை. சுத்தியலால் மண்டையை உடைப்பது, கத்தியால் வயிற்றைக் கிழிப்பது, தலை வெடித்து சிதறுவது, கற்பழிப்புக் காட்சி என பல கோரக் காட்சிகள் உண்டு. சில பல வெட்டுகளுக்குப் பின்னர் R ரேட்டிங் கொடுக்கப்பட்டு வந்த படம். கோரமானக் கொலை/வன்முறைக் காட்சிகள் உங்களுக்குப் பிடிக்கும் என்றால் இந்தப் படமும் பிடிக்கும். அதைத் தவிர வித்தியாசமாக எதுவுமில்லை. ஜஸ்ட் பாஸ் தான் - அதுவும் suspense-ஐ கடைசி வரை கொண்டு சென்றதால்!

Thursday, February 25, 2010

இரு சதம் அடித்த திருமகன்!


சச்சின் டெண்டுல்கர்..இந்த பெயர் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை துள்ளிக்குதிக்கவும் எரிச்சல் அடையவும் வைக்கும் சக்தி வாய்ந்தது. 90 களில் சச்சின் அவுட் ஆயாச்சு என்றால் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி விட்டு எழுந்து செல்பவர்கள் இருந்தார்கள். 20 வருடங்களாக ஒரு துறையில் உலகத்தின் டாப் வீரராக  இருப்பது எளிதல்ல. கடந்த 10-15 வருடங்களில் இந்தியாவில் ஒரு நாள் போட்டிகளில் ஆர்வம் அதிகரித்ததிற்கு  சச்சினின் விளையாட்டும்  ஒன்று. உலகின் முதன்முறையாக ஒரு நாள் போட்டிகளில் 200 அடித்த  வீரர் என்று நேற்று சச்சின் சாதனை புரிந்துள்ளார். இந்த நேரத்தில் அவருக்கு வாழ்த்துக்கள் !!! 

Sunday, February 21, 2010

அலை கடலென திரண்டு வாரீர்!



வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையின் (FETNA) விழா இந்த வருடம் கனக்டிகட் மாகாணத்தில் உள்ள வாட்டர்பரி என்ற ஊரில் நடைபெறுகிறது என்று தெரிகிறது. வழக்கம்போல் ஜூலை 4 (அமெரிக்க சுதந்திர தினம்) விடுமுறையை ஒட்டி 3 நாட்கள் பெரிய விழாவாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது என்று FETNA வலைப் பக்கத்தில் இருந்தும் (FETNA) சக பதிவர் ச்சின்னப் பையனின் வலைப் பக்கத்தில் (பூச்சாண்டி) இருந்தும் தெரிந்து கொண்டேன்.

நான் இதுவரை இந்த வருடாந்திர விழாவிற்கு சென்றதில்லை. சென்ற வருடம் செல்ல வேண்டும் என்று சில நண்பர்களுடன் பேசினோம். ஆனால், அது ஜார்ஜியா  மாகாணத்தில் உள்ள அட்லாண்டா நகரத்தில் நடந்தது. இங்கு இருந்து அது வெகு தொலைவு என்பதால் கைகூடவில்லை. இந்த வருடம் நமக்குப் பக்கத்தில் (6 மணி நேர கார் பயணம் தான்) தான் நடைபெறுவதால் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறோம்.

வட அமெரிக்காவில் தமிழ் மக்களைப் பார்த்து பழகவும், தமிழ் நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கவும் இந்த விழா ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்று நினைக்கிறேன். இந்த வருட விழாவிற்கு இயக்குனர் பாரதிராஜா, நடிகர் விக்ரம், நடிகர் பார்த்திபன், நடிகர் வடிவேலு, நடிகர் சூர்யா, இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், கவிஞர் தாமரை போன்ற தமிழக பிரபலங்கள் வருகையும்  தெருக்கூத்து,  குழந்தைகள் நிகழ்ச்சிகள் போன்றவையும் ஏற்பாடு செய்யப்படுகின்றது என்று தெரிகிறது.

சுத்துப் பட்டு 18 மாகாணத்துல  இருக்கும் சனங்க எல்லாரும் வண்டி கட்டிட்டு வந்து ஆதரவு தருமாறுக் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். நம்ம ஊருப் (Buffalo, NY ) பக்கத்துல இருந்து யாராவது  போறதுக்கு விருப்பமா இருந்தீங்கன்னா சொல்லுங்க. ஒரு நாளைக்கு 500 ரூபாய், பிரியாணி பொட்டலம், குவார்டர் சரக்கு எல்லாம் கொடுத்து லாரியில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்!!

Thursday, February 18, 2010

கூட்டாஞ்சோறு 1 !!

உலக ப்ளாக் வரலாற்றிலே யாருமே செய்யாத புதுமை - அடிக்கடி நாட்டு நடப்பு விஷயங்களைக் கலவையா எழுதுறது!!! (ஹி..ஹி...)!!! நமக்கும் அந்த வியாதி வந்திருச்சுன்னு சொல்லி இந்த கூட்டாஞ்சோறு பதிவுகளை ஆரம்பிச்சு வைக்கிறேன். கூட்டாஞ்சோறு திருநெல்வேலி மக்களின் வாழ்வில் முக்கியமான ஒன்று. கூட்டாஞ்சோறு கட்டிக்கிட்டு தாமிரபரணி ஆத்துலையோ, குற்றாலம், பாபநாசம், மனிமுத்தார் நீர்வீழ்ச்சிகளிலோ போய் ஒரு கட்டு கட்டிட்டு வர்றது அனைவருக்கும் பிடித்த ஒன்று! அதுனால அந்த பெயர்லயே ஆரம்பிக்கிறேன். (கூட்டாஞ்சோறு, திருநெல்வேலி முறையில் செய்ய ரெசிபி வேணும்னா சொல்லுங்க..அதையும் போட்ருவோம்!!!).

                                                          ********************
மரியாதை நிமித்தமாக  வியாழன் அன்று கலைஞரை சந்தித்தார் நடிகர் அஜித். அதான் போன வாரம் பாராட்டு விழாவில மரியாதை செலுத்திருப்பாரே இப்ப என்ன புதுசா? ஒரு வேளை அவரு அங்க பேசிய பேச்சுக்கு அந்த பக்கத்துல இருந்து வந்த பதில் "மரியாதையை" தாங்க முடியலையோ? ஹி...ஹி....அதுக்குள்ள இவர் தான்  ஆம்பளை, தன்மானத்  தமிழன், தைரியமா பேசுற ஒரே நடிகர் ன்னு ஓவரா பில்ட்-அப் குடுத்திட்டாங்க எல்லாரும்?!!! அப்புறம் கட்டின வீடு, தோட்டம் எல்லாம் புறம்போக்கு நிலத்துல கட்டினதுன்னு  நாளைக்கு நோட்டீஸ் வந்தா அவரு என்ன பண்ணுவாரு?
                                                        ********************
தமிழ் நாட்டில் கடந்த வருடம் சாலை விபத்தில் 13,000  பேர் இறந்தனர் - ஆனந்த விகடன் செய்தி. அமெரிக்காவில சராசரியா வருடத்திற்கு 50,000 பேர் சாலை விபத்தில் இறக்கின்றனர். தமிழக மக்கள் தொகை - 6.5 கோடி. அமெரிக்கா மக்கள் தொகை - 30 கோடி. கூட்டிக்கழிச்சு பார்த்தா தமிழகம் அமெரிக்காவை தாண்டிருச்சு!! அடுத்த தேர்தல்ல இனிமேல் மயிலாடுதுறையை துபாய் ஆக்குவேன், மதுரையை சிங்கப்பூர் ஆக்குவேன்னு எல்லாம் உதார் விட முடியாது..நாம தான் அமெரிக்காவையே மிஞ்சிட்டமே!

                                                        ********************
தென் ஆப்ரிக்கா  உடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ததின் மூலம் இந்தியா ICC தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது...வாழ்த்துக்கள். என்னத்த 20-20 மாதிரி காட்டுஅடி கந்தசாமிங்க விளையாட்டு வந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட் - தி பெஸ்ட் கிரிக்கெட் தான்! 
                                                        ********************
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. A. K. அந்தோணி கூறியது: எந்த ஒரு நாட்டின் ஒரு அங்குல இடத்தை கூட இந்தியா ஆக்கிரமிக்காது, அதுபோல இந்தியாவின் அங்குல இடத்தை எந்த நாடுகளும் ஆக்கிரமிக்க இந்தியா அனுமதிக்காது!! இவருக்கு அம்னீஷியாவா? இல்லை சீனாவும் நம்ம நாடுன்னு நினைச்சுக்கிறாரா? 
                                                        ********************
திருப்பதியில் சர்வதேச தரத்தில் விமான நிலையம்: செய்தி. லேண்ட் ஆகும்போதும் டேக்-ஆப் செய்யும்போதும் பைலட் கோவிந்தா! கோவிந்தா!! ன்னு சொல்லாம இருந்த சரி தான்!!
                                                        ********************
இந்த வார quotable quote: "என் மேல யாரும் கை வைக்க முடியாது!! நான் என்ன செய்யுறேன்னு தெரிஞ்சி தான் செய்யுறேன்" - நயன்தாரா. (பி.கு. நயன்தாரா பத்தி செய்தி போட்டுட்டு போட்டோ போடலேன்னா நம்ம ரசிகர்கள் ரெம்ப டென்சன் ஆயிருவாங்களே..அதுனால ஒரு படம் கீழே!!)
                                                         ********************


Friday, February 12, 2010

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!!

தலைப்பைப் பார்த்திட்டு இன்னும் 2 நாள்ல காதலர் தினம் வருதேன்னு அந்த ஞாபகத்துல இந்தப் பக்கம் வந்திருந்தா, உங்களுக்கு ஏமாற்றம் தான்?!  சமீபத்துல ஒரு அன்பர் அனுப்பிய (அருமையான எருமையின் லட்சோப லட்ச வாசகர்களில் ஒருவர்ன்னு சொல்ல ஆசை தான், ஆனா அவருக்கு தமிழ் தெரியாதே!) youtube வீடியோ உண்டாக்கிய பழைய நினைவுகளின் கோர்வை தான் இது. 80-90 களில் தொலைக்காட்சிப் பார்த்த அனைவருக்கும் இந்த ஞாபகங்கள் இருக்கும். அதில என்னோட சில ஞாபகங்கள்.

83 வருடம் நடைப்பெற்ற World Champion of Champions (Benson and Hedges) கிரிக்கெட் போட்டி தான் நான் முதல் முதலில் தொலைக்காட்சியில் கண்ட லைவ் கிரிக்கெட் போட்டி. அப்ப எங்க வீட்டுல TV  கிடையாது. கும்பகோணத்திற்கு அடுத்து உள்ள சாக்கோட்டை என்ற கிராமத்துல வசித்து வந்தோம். அந்த ஊரில் தண்ணித்தொட்டிக்கு கீழேக் கட்டப்பட்டிருந்த பஞ்சாயத்து போர்டு அலுவகலத்துல தான் எல்லாரும் கிரிக்கெட் பாப்போம். உலகக் கோப்பையை இந்தியா ஜெயித்த பிறகு வந்த போட்டி என்பதால மிகவும் பரபரப்பா இருந்தது. நம்ம ரசிகர்களையும் ஏமாற்றாம இந்தியா பைனலில் பாகிஸ்தானைத்  தோற்கடித்துக் கோப்பையைத் தட்டியது. ரவி சாஸ்திரியும் ஸ்ரீகாந்த்தும் நன்றாக ஆடியது நினைவுக்கு இருக்கிறது. ரவி சாஸ்திரிக்கு Audi கார் பரிசும் கிடைத்தது. அப்பொழுது வந்த ஒரு பத்திரிக்கையில் (ஆனந்த விகடன் என்று நினைக்கிறேன்) ரவி சாஸ்திரி படத்துடன், "நன்றாக ஆடி வாங்கினார் Audi" என்று போட்டிருந்தார்கள்!. அப்புறம் ராமாயணம், மகாபாரதம் தொலைக்காட்சித் தொடர்களாக வந்து சக்கை போடு போட்டது எல்லாருக்கும் நினைவிருக்கும். இந்த தொடர் தூர்தர்ஷனில் வரும் ஞாயிறு காலையில் தெருவே வெறிச்சோடிக் கிடக்கும். பல இடங்களில் பஸ்/ரயில்கள்  எல்லாம் நிறுத்தப்பட்டு மெகா சீரியல் முடிந்த பிறகே பயணம் தொடர்ந்த கதைகளும் உண்டு!

எங்கள் வீட்டில் முதலில் வாங்கினத் தொலைக்காட்சி ஒரு Sears Elcot வண்ணத் தொலைக்காட்சி.  அந்த ELCOT (Electronics Corporation of Tamilnadu) நிறுவனம் தான் இப்ப தமிழக அரசின் இலவசத் தொலைக்காட்சித் திட்டத்தை அமுல்படுத்திட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன். 80-களில் Sears Elcot தொலைக்காட்சிக்கு கவாஸ்கர் விளம்பரம் செய்வார். என் அண்ணன் ஒரு தீவிர கவாஸ்கர் ரசிகன், நான் கபில்தேவ்!! கவாஸ்கர் விளம்பரம் செய்த காரணத்துக்காகவே அவன் ELCOT தொலைக்காட்சியை என் தந்தையை வாங்க வைத்தான் என்று எனக்கு ஒரு சந்தேகம் உண்டு! TV வாங்குற அன்னைக்கு நான் வேற அவங்க கூட கடைக்குப் போகாம இருந்துத்  தொலைச்சிட்டேன்! TV ஐ வாங்கிட்டோமே ஒழிய உருப்படியா ஒரு சேனலும் அதுல  வராது. TV  வாங்கும்போது நாங்க வசித்து திருநெல்வேலி அருகில் உள்ள வல்லநாடு என்ற ஊரில். அப்பொழுது மொத்தமே சென்னைல TV ஸ்டேஷனும் கொடைக்கானல்ல ஒரு ட்ரான்ஸ்மீட்டரும் தான் உண்டு. நெல்லைலர்ந்து கொடைக்கானல் கிட்டத்தட்ட 150 கி.மீ. தொலைவென்பதால் ஒன்னும் சரியா வராது. மொட்டை மாடில நின்னு நின்னு கிருஷ்ணர் கையுல சக்கரம் சுத்துற மாதிரி ஆண்டனாவைச்  சுத்தினால் கொஞ்சம் எங்கயாவது புள்ளி புள்ளியா ஏதாவது தெரியும். அந்த புள்ளிகளுக்கு நடுவுல தெரியும் படம் என்னனு கண்டு பிடிக்க advanced digital signal processing எல்லாம் உங்க கண்ணுக்கு தெரிஞ்சிருக்கணும். இதுல பூஸ்டர் போட்டா படம் நல்ல தெரியும்ன்னு பூஸ்டர் மேல பூஸ்டர் போட்டாலும் புள்ளி என்னவோ மாறின மாதிரி எனக்கு தெரியாது. அந்த பூஸ்டர் பொட்டி தான், "ஏம்பா, நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்ணுறேன்? இருந்தா குடுக்க மாட்டேனா"ன்னு கதறுவது போல இருக்கும். பருவநிலை நன்றாக இருந்தா, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ரூபவாகினி நிகழ்ச்சிகளும் தெரியும். அதுல ஞாயிறு மதியம்  1 மணி நேரம் வரும் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியைப் பார்க்க 1 மணி நேரமும் மொட்டை மாடியில் உச்சி வெயிலில் நின்ன சோகமெல்லாம் நடந்திருக்குது!

இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு வயலும் வாழ்வும், ஹிந்தி நியூஸ் ன்னு நிறைய நிகழ்ச்சிகளைப் பார்த்து நம்ம பொது அறிவை ரெம்ம்மம்ம்ம்ப வளர்த்திர்ருக்கோம்ன்னு  வச்சுக்கோங்க. இந்தக் காலக்கட்டத்துல TV பார்த்த எல்லாருக்கும் அதுல வந்த நிகழ்ச்சிகள் (மௌலியின் Flight 172, பாலச்சந்தரின் ரயில் ஸ்நேகம் - உடனடியாக நினைவுக்கு வருபவை), முக்கியமா விளம்பரங்கள் (வாஷிங் பவுடர் நிர்மா - டோய்ய்ய்ய்ய்ங்) போன்றவை மறக்க முடியாதது. அந்த விளம்பரங்களில் சில இந்த youtube வீடியோவில். இதை எல்லாம் பார்த்திட்டு 80-90 களின் வேற ஞாபகங்கள் உங்களுக்கு வந்தா, அதுக்கு நான் பொறுப்பு கிடையாது!! காதலர் தினம் வேற வருது. உடம்பு பத்திரம்!! :-))

Tuesday, February 9, 2010

எல்லாம் ஒரு விளம்பரந்தேன்!

நம்மூருல பையனை காலேஜ்ல சேர்த்த உடனயே அவன்  பெயருக்குப் பின்னாடி B.A., B.E., ன்னு எதாவது போட்டு அதுக்கு மேல ஒரு கோடு போடுற வழக்கம் உண்டு. அதுவும் அந்த நேரம் பார்த்து வீட்டுல எதாவது கல்யாணம் காட்சின்னு வந்தாச்சுன்னா, தங்கள் நல்வரவை நாடும்ன்னு போட்டு கீழே பெயர், டிகிரி, கோடு எல்லாம் போட்டு பத்திரிக்கை அடிச்சிருவாங்க. என்ன, முதல் வருஷம் வாங்கின அரியர்சையே எப்ப முடிப்போம்ன்னு அவனுக்கு தெரியாத சமயங்களில் இந்தக் கோடு பல வருஷம் அப்படியே இருக்கவும் சான்ஸ் இருக்குது!  என் அத்தை பையன் ஒருத்தரு கடந்த 30 வருஷமா B.A. க்கு மேல கோடு போட்டுட்டு இருக்காரு - அவர் காலேஜ் போனதே மொத்தம் 1 வருஷம் தான்!!!

இப்படி போன தலைமுறைல காலேஜ்/பெரிய படிப்புன்னு போறதே நிறைய குடும்பங்களில் பெரிய சாதனையா இருந்தது. அதுவும் கிராமப் புறங்களில் இருந்து பையன் குடும்பத்தில் முதல்முறையா காலேஜ் போனா, அது குடும்பப் பெருமை தான். இப்ப அப்படி எல்லாம் இருக்கிற மாதிரி தெரியலை. (அதான் தெருவுக்கு 2 காலேஜ், ஊருக்கு 3 இன்ஜினியரிங் காலேஜ்ன்னு படிக்கிறதுக்கு ஆள் தேடிட்டு இருக்காங்களே!). இருந்தாலும் இந்தப் பெருமைக்கு எருமை மேய்க்கிற மாதிரி டிகிரில கோடு போடுற பழக்கம் இன்னும் இருந்துகிட்டு தான் இருக்குது, என்ன இப்ப வேற மாதிரி. ஒரு மாசம்  NIIT மாதிரி இடங்களில் போய் கடலைப் போட்டுட்டு வந்திட்டு java, html, c++, oops, network engineer ன்னு எல்லா கோர்ஸ் ஐயும் மொத்தமாக் கரைச்சுக்குடிச்சா மாதிரி CV ல போட்டுக்கிறது நிறைய இடங்களில் நடக்குது. கம்பெனிகளுக்கும் இதெல்லாம் தெரியும் (இன்டர்வியு பண்ணுறவனும் இப்படிப்  பண்ணித்தான் வந்திருப்பானோ?). இருந்தாலும் அவங்களுக்கு தேவை ஆட்கள் தான், பல நேரங்களில் ஆட்களின் திறமை/படிப்பு இரண்டாம் பட்சம் தான். உள்ள வந்த பிறகு எப்படியும் ட்ரைனிங்ல பிடிச்சிருவோம்ன்னு  விட்டிருவாங்க.

இப்படி நம்மப் படிப்பை வச்சு காமெடி பண்ணுறது ரொம்ப சாதாரணமா ஆகிப்போச்சுது?! சென்ற வார ஆனந்த விகடன்ல பாடலாசிரியர் நா. முத்துக்குமார் ஒரு பேட்டி அளித்திருந்தார். விகடன்ல எனர்ஜி பக்கங்கள்ன்னு ஒரு பகுதில. அதைப் படித்த உடன் தோன்றிய விஷயங்கள் இங்கே!! (விகடன் மாதிரி பாரம்பரியப் பத்திரிக்கைல ஆங்கிலக் கலப்பு ரொம்ப இருக்குதுன்னு நண்பர் ஒருவர் சமீபத்துல கூறியது நினைவுக்கு வருது - junior விகடன், energy பக்கங்கள், இன்பாக்ஸ், ஸ்பெஷல் 1, கிளிக்ஸ் இப்படி! - அதை இன்னொரு முறைப் பார்ப்போம்!!). அந்த பேட்டியில் கவிஞர் எப்படி இந்த நல்ல நிலைக்கு தான் வந்தார்  (பல  விருதுகள்  பெற்றவர்,  பல படங்களில் வெற்றிப் பாடல்களைக் குடுத்துக் கொண்டு இருப்பவர்!) என்று இளைஞர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் நன்கு கூறி இருந்தார். அந்த பேட்டில 2 விஷயங்கள் எனக்கு உதைச்சது! ஒன்று, இவர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் (B.Sc., இயற்பியல்) ஒரு ஆசிரியர் திட்டியதாகவும், அப்பொழுது நன்கு படிக்கும் மாணவன் ஒருவன் இவரைப் பார்த்து சிரித்ததாகவும் கூறி உள்ளார். அதற்காக வைராக்கியம் கொண்டு இவர் 85% மதிப்பெண்ணுடன் கல்லூரியை முடித்தாராம். இளைஞர்கள் மனசு வைத்தால் சாதிக்க முடியாதது இல்லை என்ற கருத்தை வலியுறுத்த இதைக் கூறியது நல்லது தான். ஆனா, இவரைப் பார்த்து சிரித்த மாணவனுக்கு B.Tech. இடம் கிடைக்கவில்லை என்றும் இவருக்கு கிடைத்தது என்றும் கூறி இருப்பது தேவை தானா? அந்த மாணவன் என்ன மதிப்பெண்கள் பெற்றான், இவருக்கு அல்லது அவனுக்கு ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு இருந்ததா போன்ற முக்கியமான விவரங்கள் இல்லாமல் பெருமைக்கு எருமை மேய்த்தல் தேவையா? நானும் B.Sc. இயற்பியல் முடித்து B.Tech. இடத்திற்கு விண்ணப்பம் அனுப்பியவன் தான் (ஏறக்குறைய திரு. முத்துக்குமார் படித்த அதே காலக்கட்டத்தில் தான்?)  - 90% க்கு மேல்  எடுத்து இடம் கிடைக்காமல் இருந்த நண்பர்களும் இருக்கிறார்கள், அதே போல 70% எடுத்து B.Tech. சேர்ந்த நண்பர்களும் இருக்கிறார்கள்.

B.Tech. இடம் கிடைத்தாலும், இவர் தமிழ் மீதுள்ள ஆர்வத்தினால், M.A. தமிழ் இலக்கியம் சேர்ந்துப் படித்தார் என்பது மிகவும் முக்கியமான விஷயம். நம்ம ஊருல பையன் எதுல ஆர்வமா இருக்கான்னு யாருமே கேட்கிறதில்லை. உற்றார் உறவினர், பக்கத்துக்கு வீட்டு பையன் என்ன படிக்கிறான் போன்றவை தான் தன் மகன்/மகள் எங்க, என்ன படிக்கணும்னு தீர்மானிக்கும் சக்திகள்?!! அப்படிப் பட்ட சமூகச் சூழ்நிலையில் தனக்கு விருப்பமான தமிழ் இலக்கியம் படிக்கணும்னு முடிவு பண்ணி அதை செய்து காட்டியது பாராட்டத் தக்கது. ஆனா, இங்கயும் ஒரு விஷயம் இடிக்குது.
M. A. தமிழ் இலக்கியம் சென்னையில் படிச்சு முடிச்ச உடன், இவரை அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகம் மாதம் 3 லட்ச ரூபாய் சம்பளத்துக்கு தமிழ் முனைவர் வேலைக்கு கூப்பிட்டதாம். ஆனால், வேண்டாம் என்று நிராகரித்து விட்டு திரைப்படத் தொழிலில்  இறங்கியுள்ளதாகக் கூறுகிறார்.  நானும் அமெரிக்காவில் கல்வித்துறையில் தான் வேலை செய்து கொண்டிருக்கிறேன் - இவரா அந்த வேலைக்கு விண்ணப்பிக்காம யாரும் இவரைக் கூப்பிட எந்த வழியும் இருப்பதாக எனக்கு தோணவில்லை?! அப்புறம் எனக்கு தெரிஞ்சு அமெரிக்காவில் நூற்றுக்கும் குறைவான மாணவர்கள் தான் பல்கலைக்கழகங்களில் தமிழ் படித்துக் கொண்டிருக்கிறார்கள். M.A. முடித்த ஒருவருக்கு கிட்டத்தட்ட $80-100,000 (வருடத்திற்கு) ஆரம்பத்திலேயேக் கொடுத்து எந்த பல்கலைக்கழகமும் வேலை வழங்கும் என்பது எனக்கு சந்தேகமே!

இதெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால், இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை வழங்கும் ஒரு நல்ல கட்டுரையில் எதற்கு இந்த பெருமை எல்லாம்? இதற்கும் B.A. என்று எழுதி அதன் மேல் கோடு போட்டுக்கொள்வதற்கும்  என்ன வித்தியாசம்? கவுண்டமணி கரகாட்டக்காரன் படத்தில் சொல்லும், "இந்த சினிமாக் காரங்க தான் தனக்கு தானே போஸ்டர் அடிச்சு ஒட்டிக்கிறாங்க..ஒன்னுமே கிடைக்கலைன்னா பிறந்த நாள் கொண்டாடிக்கிறாங்க" வசனம் தான் நினைவுக்கு வருகிறது. என்ன சொல்லுறீங்க?

Friday, February 5, 2010

Dave-ஐக் காப்பாத்திட்டாங்க!!!

 Dave Kiely - கடந்த சில நாட்களாக இந்த பெயர் அனைத்து தொலைக்காட்சிகளிலும், செய்தித் தாள்களிலும் அடிபட்டுக் கொண்டு இருக்கிறது!. ஆஸ்திரேலியாவில் ஒரு வங்கியில் வேலை செய்யும் இவர், வேலை நேரத்தில் ஒரு ஆஸ்திரேலியா சூப்பர் மாடல் உடைய நிர்வாண (கிட்டத்தட்ட!) புகைப்படத்தைப் பார்த்துகொண்டு இருந்திருக்கிறார். Dave உடைய  போறாத நேரம், அவரது அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவர் ஒரு தொலைக்காட்சிக்கு அந்த நேரத்தில் பேட்டி  அளித்துள்ளார். நாடே பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு லைவ் நிகழ்ச்சியில் Dave TV காமிராவை கவனிக்கமால் (பேட்டி எடுப்பவரின் பின் புறம் இவர் அமர்ந்திருக்கிறார்) அந்தப் படத்தை இமெயிலில் திறந்து பார்ப்பது வந்து விட்டது. திடீர் என்று அதை உணர்ந்து திடுக்கிட்டு காமிராவைத் திடுக்கிட்டு பார்கிறார் Dave. இது தான் நடந்த விஷயம். (அருகில் உள்ள படத்தில் பின்புறம் கம்ப்யூட்டர்-ஐ பார்த்துக்கொண்டு இருப்பவர் தான் நம்ம Dave!).

இத  வச்சு அனைத்துத்  தொலைகாட்சி செய்தியாளர்களும் கடந்த சில நாட்களாக வாழ்ந்து விட்டனர்! Dave அடிக்கடி இந்த வேலையைத் தான் செய்து கொண்டு இருந்தாரா, இல்லை யாரோ அவருக்கு அந்த நேரத்தில் இமெயிலில் இந்த படத்தை இணைத்து அனுப்பி அவரை மாட்டி விட்டார்களா என்று அவர் வேலை செய்யும் வங்கி விசாரணை செய்து கொண்டு இருந்தது. இந்த விஷயத்தை வைத்து அவரை வேலைநீக்கம் செய்ய போகிறார்கள் என்றும்  செய்திகள் வந்துகொண்டு இருந்தன. இதற்குள் உலகம் முழுவதும் Save Dave என்று facebook, twitter என்று மக்கள் கூட்டம் சேர்க்க ஆரம்பித்து விட்டனர். இந்தியாவில் எப்படி என்று தெரியவில்லை. இங்கு அமெரிக்காவில் CNN, Fox போன்ற பெரிய சேனல்களில் இருந்து லோக்கல் சேனல் வரைக்கும் இந்த செய்தியும் Save Dave கூட்டம் சேருவதும் பிரபலம் ஆகி விட்டது.

நீங்க என்ன நினைக்கிறீங்க? Dave-ஐ வேலைநீக்கம் செய்யலாமா இல்லை யாரு தான் இதெல்லாம் பண்ணலை ன்னு அவரை காப்பாதிரலாமா? கண்டிப்பா படிச்சிட்டு பதில் அடிங்க. அந்த வீடியோ பார்க்க ஆசைப் படுபவர்கள் இங்கே செல்லவும்: Dave

பி.கு.: இன்றைய காலை பிளாஷ் நியூஸ் படி (அமெரிக்கா நேரம்) Dave- ஐ வேலைநீக்கம் செய்யப் போவதில்லைன்னு அவரது வங்கி தீர்மானம் செய்துள்ளது!!

Thursday, February 4, 2010

ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்!!!

சமீபத்தில் YouTube இல் பார்த்த ஒரு நகைச்சுவையான விடியோ. பலர் ஏற்கனவே பார்த்திருப்பீங்க. 
பார்க்காதவங்க பார்த்து மகிழுங்கள்!!


Wednesday, February 3, 2010

இவங்க தொல்லை தாங்க முடியலையே!!

நம்ம அப்துல் கலாம் ரிட்டைர் ஆயிட்டாரு, சந்திரயான் அண்ணாதுரையும் வேற ப்ராஜெக்ட்க்கு போய்ட்டாருன்னு  நம்ம ஊரு மீடியாக்கு கொஞ்ச நாளா எந்த விஞ்ஞானியும் சிக்காம கொஞ்சம் கஷ்டப்பட்டுட்டுத் தான் இருந்தாங்க. அவங்க வயித்துல பாலை வார்த்தது நம்ம (?!) நோபல் பரிசுக்காரங்க தான். வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்னு ஒரு தமிழர்க்கு (?!) இந்த வருட வேதியல் நோபல் பரிசைக் குடுத்து நம்ம பத்திரிக்கைகளுக்கு நல்ல தீனி போட்டாங்க. அவரு உட்கார்ந்தா நியூஸ், எழுந்திருச்சா நியூஸ்னு எல்லாரும் நல்லா கல்லா கட்டிட்டு இருந்தாங்க. இதுல லேட்டஸ்ட் நியூஸ், நேத்திக்கு அவருக்கு இங்கிலாந்துல ஒரு கம்பெனி iPhone குடுக்க மாட்டேன் ன்னு சொல்லி அதிகமா காப்பு தொகை (security deposit) கட்ட சொல்லிவிட்டதாம். நம்ம இனத்துக்கே இது இழுக்கு லெவல்ல இந்த நியூஸ்ல இருக்கிற அறிக்கைகளைப் படிச்சீங்கன்னா...என்னாத்த சொல்லுறதுன்னு தெரியலை!!!

முதல்ல, இங்கிலாந்துன்னு இல்லை, எல்லா மேற்கத்திய நாடுகளிலும் கார் லோன், வீட்டு  லோன், செல்போன்னு  என்னத்த  வாங்க போனாலும்  உங்க credit history என்னனு பார்த்திட்டு தான் கடனைக் குடுப்பாங்க. முத முதல்ல அமெரிக்கா வந்த புதுசுல ஒரு உருப்படியான credit card ஐ வாங்க நாம எல்லாரும் கொஞ்சம் கஷ்டப்பட்டிருப்போம். இருக்கிறதுலயே வெட்டியான பேங்க் தான் முதல்ல நமக்கு கார்டு குடுப்பான். (அந்த வங்கிகள்ல பாதிக்கு மேல இப்ப மூடியாச்சுன்னு வச்சுகோங்க!). அதுவும் எனக்கு முதல்ல குடுத்த கார்டுல $200 லிமிட் இருந்தது..இதை வச்சுக்கிட்டு 2 கடைல போய் மளிகை எல்லாம் வாங்கினா லிமிட் வந்திரும். ஆனால், இங்க வந்து சில மாதங்கள் ஆன பிறகு, உங்களை நம்பி பணம் குடுக்கலாம்ன்னு பேங்க் காரன் நம்ப ஆரம்பிச்ச பிறகு, நீங்க போதும் போதும்ங்கற அளவுக்கு தினமும் கிரெடிட் கார்டு கம்பெனிகாரன் ஈமெயில், கொசுமெயில்ன்னு உங்களை வரிசை கட்டி நோக அடிப்பானுங்க. இது தான் அநேகமா எல்லா நாடுகளிலும் உள்ளது. இப்ப இதை எதுக்கு இங்க சொல்லி உயிரை வாங்குறேன்னு கேட்கிறீங்களா..இங்க தான் நம்ம நோபல் அண்ணன் வர்றாரு.

வெங்கி iphone புதுசு வாங்கலாம்னு முடிவு பண்ணி கேட்டபோது இவரது credit history சரி இல்லைன்னு சொல்லி அவரை கூடுதல் டெபாசிட் கட்ட சொல்லிட்டாங்களாம் இங்கிலாந்து போன் கம்பெனிக்காரங்க. உடனே, இவரு நான்தான் 10 வருஷமா இந்த நாட்டுல இருக்கிறனே, எனக்கு எப்படி credit history இல்லைன்னு சொல்லலாம், இது இனப் பாகுபாடு தான்னு அடிச்சு விட்டாரு!! ஹ்ம்ம்...இதை மீடியால சொல்லுறதுக்கு பதில் அந்த கம்பெனில கொஞ்சம் பொறுமையாக் கேட்டிருந்தா  விளக்கமா சொல்லிருப்பாங்களோ? விஷயம் என்னன்னா, இவரு பெயரை வெங்கட்ராமன்னு முழுசா எழுதாம வெங்கின்னு அப்ளிகேஷன்ல  சுருக்கி எழுதிருக்காரு போல. அதைப் பார்த்த அந்த கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ரெண்டும் வேற வேற ஆளுன்னு  நினைச்சு, இவருக்கு இங்க credit history இல்லைன்னு சொல்லிருச்சு. (இந்த சாப்ட்வேர்ஐ எழுதியது நம்ம ஊர்க்காரனா இருக்க சான்ஸ் இருக்குங்கறது வேற விஷயம்!!!). இது தான் அந்த போன் கம்பெனி தரப்புல குடுக்கப்பட்ட விளக்கம்.

இந்த மாதிரி பெயர் குழப்பம் ஒரு மிக மிக சாதாரண விஷயம். நம்மளை மாதிரி சடகோபன் சாயங்காலம்வந்தான், அமிஞ்சிக்கரை அருணாசலம் ன்னு பெரிய்ய்ய்யய்ய்ய்ய பெயரை வச்சிருக்கிற எல்லாரும் எதிர்கொள்வது தான். நாம பெயரை முழுசா எழுதினாலே அதுல தப்பு விடறது வெள்ளைக்காரங்களுக்கு கை வந்த கலை. இதுல போய் பெயரை சட்ஸ் சாய்வந்த்ஸ், அம்ஸ் அருண்ஸ் ன்னு நாமளே சுருக்கி வச்சுக்கிட்டு அதை கம்ப்யூட்டர் சாப்ட்வேர் கண்டுபிடிச்சிரும்னு நினைச்சேன்னு சொல்லுறது சின்ன புள்ள தனமா இருக்கு.

அதுவும் இது இன வெறியினால் தான் நடந்தது போன்ற மிக முக்கியமான வார்த்தைகள், அதுவும் ஒரு நோபல் பரிசு பெற்றவர்கிட்ட இருந்து, வருவதற்கு  முன் அவர் கொஞ்சம் பொறுமையை கடை பிடிச்சிருந்தா நல்லா இருந்திருக்கும். ஆமா...அவரு தான் நோபல் பரிசே வாங்கிட்டாரு, நாம சொல்லியா இதெல்லாம் கேட்கப் போறாரு! அதான் முதல்லயே சொல்லிருந்தனே...என்னாத சொல்லுறதுன்னே தெரியலை, போங்க!!

டிஸ்கி 1: சரி, இவ்வளவு விஷயங்களை விசாரிச்சு தானே கடன் குடுக்கிறாங்க, அப்புறம் ஏன் அமெரிக்கால வங்கிகள் எல்லாம் திவால் ஆகுதுன்னு கேட்டுராதீங்க!!!!
டிஸ்கி 2: மூணு வயசுலயே தமிழ்நாட்டை விட்டு இவரு போயிட்டாரே...இன்னமும் இவரை தமிழர்ன்னு சொல்லுறது கரீட்டான்னு  கேட்காதீங்க!!!