Friday, February 12, 2010

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!!

தலைப்பைப் பார்த்திட்டு இன்னும் 2 நாள்ல காதலர் தினம் வருதேன்னு அந்த ஞாபகத்துல இந்தப் பக்கம் வந்திருந்தா, உங்களுக்கு ஏமாற்றம் தான்?!  சமீபத்துல ஒரு அன்பர் அனுப்பிய (அருமையான எருமையின் லட்சோப லட்ச வாசகர்களில் ஒருவர்ன்னு சொல்ல ஆசை தான், ஆனா அவருக்கு தமிழ் தெரியாதே!) youtube வீடியோ உண்டாக்கிய பழைய நினைவுகளின் கோர்வை தான் இது. 80-90 களில் தொலைக்காட்சிப் பார்த்த அனைவருக்கும் இந்த ஞாபகங்கள் இருக்கும். அதில என்னோட சில ஞாபகங்கள்.

83 வருடம் நடைப்பெற்ற World Champion of Champions (Benson and Hedges) கிரிக்கெட் போட்டி தான் நான் முதல் முதலில் தொலைக்காட்சியில் கண்ட லைவ் கிரிக்கெட் போட்டி. அப்ப எங்க வீட்டுல TV  கிடையாது. கும்பகோணத்திற்கு அடுத்து உள்ள சாக்கோட்டை என்ற கிராமத்துல வசித்து வந்தோம். அந்த ஊரில் தண்ணித்தொட்டிக்கு கீழேக் கட்டப்பட்டிருந்த பஞ்சாயத்து போர்டு அலுவகலத்துல தான் எல்லாரும் கிரிக்கெட் பாப்போம். உலகக் கோப்பையை இந்தியா ஜெயித்த பிறகு வந்த போட்டி என்பதால மிகவும் பரபரப்பா இருந்தது. நம்ம ரசிகர்களையும் ஏமாற்றாம இந்தியா பைனலில் பாகிஸ்தானைத்  தோற்கடித்துக் கோப்பையைத் தட்டியது. ரவி சாஸ்திரியும் ஸ்ரீகாந்த்தும் நன்றாக ஆடியது நினைவுக்கு இருக்கிறது. ரவி சாஸ்திரிக்கு Audi கார் பரிசும் கிடைத்தது. அப்பொழுது வந்த ஒரு பத்திரிக்கையில் (ஆனந்த விகடன் என்று நினைக்கிறேன்) ரவி சாஸ்திரி படத்துடன், "நன்றாக ஆடி வாங்கினார் Audi" என்று போட்டிருந்தார்கள்!. அப்புறம் ராமாயணம், மகாபாரதம் தொலைக்காட்சித் தொடர்களாக வந்து சக்கை போடு போட்டது எல்லாருக்கும் நினைவிருக்கும். இந்த தொடர் தூர்தர்ஷனில் வரும் ஞாயிறு காலையில் தெருவே வெறிச்சோடிக் கிடக்கும். பல இடங்களில் பஸ்/ரயில்கள்  எல்லாம் நிறுத்தப்பட்டு மெகா சீரியல் முடிந்த பிறகே பயணம் தொடர்ந்த கதைகளும் உண்டு!

எங்கள் வீட்டில் முதலில் வாங்கினத் தொலைக்காட்சி ஒரு Sears Elcot வண்ணத் தொலைக்காட்சி.  அந்த ELCOT (Electronics Corporation of Tamilnadu) நிறுவனம் தான் இப்ப தமிழக அரசின் இலவசத் தொலைக்காட்சித் திட்டத்தை அமுல்படுத்திட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன். 80-களில் Sears Elcot தொலைக்காட்சிக்கு கவாஸ்கர் விளம்பரம் செய்வார். என் அண்ணன் ஒரு தீவிர கவாஸ்கர் ரசிகன், நான் கபில்தேவ்!! கவாஸ்கர் விளம்பரம் செய்த காரணத்துக்காகவே அவன் ELCOT தொலைக்காட்சியை என் தந்தையை வாங்க வைத்தான் என்று எனக்கு ஒரு சந்தேகம் உண்டு! TV வாங்குற அன்னைக்கு நான் வேற அவங்க கூட கடைக்குப் போகாம இருந்துத்  தொலைச்சிட்டேன்! TV ஐ வாங்கிட்டோமே ஒழிய உருப்படியா ஒரு சேனலும் அதுல  வராது. TV  வாங்கும்போது நாங்க வசித்து திருநெல்வேலி அருகில் உள்ள வல்லநாடு என்ற ஊரில். அப்பொழுது மொத்தமே சென்னைல TV ஸ்டேஷனும் கொடைக்கானல்ல ஒரு ட்ரான்ஸ்மீட்டரும் தான் உண்டு. நெல்லைலர்ந்து கொடைக்கானல் கிட்டத்தட்ட 150 கி.மீ. தொலைவென்பதால் ஒன்னும் சரியா வராது. மொட்டை மாடில நின்னு நின்னு கிருஷ்ணர் கையுல சக்கரம் சுத்துற மாதிரி ஆண்டனாவைச்  சுத்தினால் கொஞ்சம் எங்கயாவது புள்ளி புள்ளியா ஏதாவது தெரியும். அந்த புள்ளிகளுக்கு நடுவுல தெரியும் படம் என்னனு கண்டு பிடிக்க advanced digital signal processing எல்லாம் உங்க கண்ணுக்கு தெரிஞ்சிருக்கணும். இதுல பூஸ்டர் போட்டா படம் நல்ல தெரியும்ன்னு பூஸ்டர் மேல பூஸ்டர் போட்டாலும் புள்ளி என்னவோ மாறின மாதிரி எனக்கு தெரியாது. அந்த பூஸ்டர் பொட்டி தான், "ஏம்பா, நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்ணுறேன்? இருந்தா குடுக்க மாட்டேனா"ன்னு கதறுவது போல இருக்கும். பருவநிலை நன்றாக இருந்தா, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ரூபவாகினி நிகழ்ச்சிகளும் தெரியும். அதுல ஞாயிறு மதியம்  1 மணி நேரம் வரும் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியைப் பார்க்க 1 மணி நேரமும் மொட்டை மாடியில் உச்சி வெயிலில் நின்ன சோகமெல்லாம் நடந்திருக்குது!

இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு வயலும் வாழ்வும், ஹிந்தி நியூஸ் ன்னு நிறைய நிகழ்ச்சிகளைப் பார்த்து நம்ம பொது அறிவை ரெம்ம்மம்ம்ம்ப வளர்த்திர்ருக்கோம்ன்னு  வச்சுக்கோங்க. இந்தக் காலக்கட்டத்துல TV பார்த்த எல்லாருக்கும் அதுல வந்த நிகழ்ச்சிகள் (மௌலியின் Flight 172, பாலச்சந்தரின் ரயில் ஸ்நேகம் - உடனடியாக நினைவுக்கு வருபவை), முக்கியமா விளம்பரங்கள் (வாஷிங் பவுடர் நிர்மா - டோய்ய்ய்ய்ய்ங்) போன்றவை மறக்க முடியாதது. அந்த விளம்பரங்களில் சில இந்த youtube வீடியோவில். இதை எல்லாம் பார்த்திட்டு 80-90 களின் வேற ஞாபகங்கள் உங்களுக்கு வந்தா, அதுக்கு நான் பொறுப்பு கிடையாது!! காதலர் தினம் வேற வருது. உடம்பு பத்திரம்!! :-))

2 comments:

Partha said...

Good. Benson and Hedges was during 1985.
http://www.cricinfo.com/ci/engine/match/65731.html
Ravi Shastri 42% strike rate la aadi naalum Audi vaangi kondu vanthan. That was also the last time we remember L.Siva as a player.

How about Chennai Tholaikaachi Nilaya news readers. It appears that Sandhya Rajagopal did not change much over decades.

அருமையான எருமை said...

ஆமா! 85 ல தான் benson & hedges, உலகக் கோப்பைப் பத்தி எழுதியதில் 83 உடன் குழப்பி விட்டேன்..நன்றி!