Tuesday, July 20, 2010

The Girl with the Dragon Tattoo - சினிமா விமர்சனம் !

Stieg Larsson:  2004 இல் தனது 50 ஆவது வயதில் இறந்து போன ஸ்வீடன் நாட்டு எழுத்தாளர். இவர் எழுதி வைத்துச் சென்ற 3 க்ரைம் நாவல்கள் தான் கடந்த சில வருடங்களாக உலகில் சக்கை போடு போட்டுக்கொண்டு இருக்கும் புத்தகங்கள். Girl with the Dragon Tattoo (2005), Girl who played with Fire (2006), Girl who kicked the Hornet's Nest (2007) ஆகியவை தான் அந்தப்  புத்தகங்கள்.  இன்றும் New York Times டாப் 10 புத்தக வரிசையில் இந்த 3 புத்தகங்களும் இருக்கின்றன! இதில் முதல் புத்தகத்தை சமீபத்தில் படித்தேன்.  க்ரைம் கதை - கொஞ்சம் அரசியல், கொஞ்சம் பிசினஸ் ஆட்களின் ஏமாற்று வேலைகள், நிறைய சஸ்பென்ஸ், கொலைகள், கொஞ்சமே கொஞ்சம் செக்ஸ் என்று நல்ல கலவை. கதையில் ஆசிரியரின் நடையும், தொய்வில்லாமல் கொண்டு சென்ற விதமும் மிகவும் கவர்ந்தன. சில வருடங்களாக க்ரைம் கதைகளில் எனக்கு அவ்வளவு ஆர்வமில்லாமல் இருந்தும் இந்தக் கதை ஊன்றி படிக்கத் தூண்டியது. புத்தகத்தைக் கிட்டத்தட்ட முடிக்கும் சமயத்தில் இது திரைப்படமாக இங்கு வெளி வருகிறது என்று தெரிந்த உடன் கதையைப் படிப்பதை நிறுத்தி விட்டேன் - முடிவு சஸ்பென்ஸ் ஆகவே இருக்கட்டும் என்று. 2009 வருடத்தில் இந்த 3 புத்தகங்களுமே திரைப்படம் ஆக்கப்பட்டு  ஸ்வீடன் மொழியில் வந்து விட்டன. அமெரிக்காவில் முதல் படம் மார்ச் மாதமும் இரண்டாவது படம் போன வாரமும் வந்துள்ளது.

சென்ற வாரம் முதல் படம் -  The Girl with the Dragon Tattoo படத்தை மிக்க ஆர்வத்துடன் DVD-இல் பார்த்தேன். புத்தகத்தை படித்து விட்டு படம் பார்க்க ஆரம்பித்தால் என்ன நடக்கும் என்று ஏற்கனவே Harry Potter இல் பட்ட அனுபவம் மனதில் தோன்றி மறைந்தாலும், சரி, இது ஹாலிவுட் காரங்க கையுல மாட்டலையே ஸ்வீடன்காரங்க ஒரு வேளை நல்ல எடுத்திருக்கலாமேன்னு ஒரு நப்பாசை இருந்தது. ஆனா, படம் பார்த்த உடன்  ஏமாற்றம் தான் மிஞ்சியது. இப்போது படம் பார்த்து சில நாட்கள் ஆகிவிட்ட பிறகு, இது மோசமான படம் இல்லை என்று தான் தோணுது. இந்தப் புத்தகத்தை நீங்க படிக்கவில்லையா - கண்டிப்பாகப் படத்தைப் பார்க்கலாம். புத்தகத்தைப் படித்தவர்கள் அல்லது படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் - படத்தை விட்டுவிடுங்கள். ஒரு சின்ன கதைச்சுருக்கம் கீழே!

Blomkvist  என்ற பத்திரிக்கைகாரரும் Lisbeth என்ற கம்ப்யூட்டர் ஹாக்கர்/துப்பறியும் பெண்ணும் தான் கதையில் முக்கிய பங்கு வகிப்பவர்கள்.  Blomkvist ஐ ஒரு பெரிய பிசினஸ் குடும்பம் (Vanger group) வேலைக்கு அமர்த்துகிறது - 40 வருடங்களுக்கு முன்னால் காணாமல் போன அவர்களது குடும்பத்து டீன்-ஏஜ் பெண்ணைக் கண்டுபிடிக்க சொல்லி. சம்பவம் நடந்து பல வருடங்கள் கடந்து விட்டதால் எந்த க்ளூ-வும் கிடைக்காமல் திணறும் Blomkvist-க்கு எதிர்பாராத விதமாக Lisbeth-இன் அறிமுகம் கிடைக்கிறது. Lisbeth ஒரு வினோதமான பெண். அவளைப்பற்றி யாருக்கும் எதுவும் தெரிவதில்லை. இவர்கள் இருவரும் Vanger குடும்பத்திற்கு சொந்தமான தனித்தீவில் தங்களது துப்பறியும் வேலையை ஆரம்பிக்கிறார்கள் - எதிர்பாராத திருப்பங்கள், திடுக்கிட வைக்கும் சம்பவங்கள் என்று கதை வேகமாக செல்கிறது. முடிவில் காணமல் போன பெண் உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்ற கேள்விக்குக் கிடைக்கும் விடையுடன் கதை முடிகிறது.

ஸ்வீடன் மொழியில் எடுக்கப்பட்டிருக்கும் படத்திற்கு ஆங்கில ஒலியும், ஆங்கில சப்-டைட்டிலும் DVD-இல் இருக்கிறது. படம் நம்மூரு படம் போல 2:30 மணி நேரம் செல்கிறது. கிட்டத்தட்ட 10 மில்லியன் டாலர் மட்டுமே செலவு செய்து எடுக்கப்பட்டு 100 மில்லியனுக்கு மேல் அள்ளிக்கொண்டிருக்கும் படம். R  - ரேட்டிங் குடுக்கப்பட்டப் படம், எனவே குழந்தைகள் இல்லாமல் பார்ப்பது நல்லது!

1 comment:

thiraivirumbi said...

namma ooru padam madiri pattu, paittu ellam irukkudha?