Monday, January 25, 2010

Cloudy with a chance of meat balls - விமர்சனம்


Barretts எழுதிய  மிகப் பிரபலமான குழந்தைகள் புத்தகத்தின் கதையைத் தழுவி சினிமாவாக எடுத்துள்ளனர். அட்லாண்டிக் கடலில் இருக்கும் ஒரு சிறு தீவில் (Sardine Falls) தான் கதை நடக்கிறது. அங்கு சார்டின் மீனைத் தவிர வேற எந்த உணவும்  கிடைக்காது. 3 வேளையும் அதையே உணவாக அனைவரும் உட்கொள்ளுகிறார்கள்.
சிறு வயதிலேயே அறிவியல், கண்டுபிடிப்புகள் என்று ஆர்வத்துடன் இருக்கும் அந்த ஊர் சிறுவன் Flint, பள்ளியில் மற்ற குழந்தைகளால் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிறான். பெரியவன் ஆன பிறகும் அப்படியே இருப்பது கண்டு (ஹாலிவுட் "வழக்கப்படி" விஞ்ஞானி என்றால் கிறுக்குத்தனமாக, சமூகத் தொடர்பு இல்லாமல் இருக்கும் stereotyping  இங்கும் இருக்கிறது!), மீன் பிடித்தல் கடை நடத்தும் அவனது தந்தை வருத்தம் அடைகிறார். அதைப் பற்றி கவலைப் படாத Flint தனது முக்கிய கண்டுபிடிப்பான உணவு செய்யும் இயந்திரத்தில் கவனமாக இருக்கிறான். அவனது இயந்திரத்தில் தண்ணீர் ஊற்றி microwaves செலுத்தினால் நாம் கேட்கும் உணவு கிடைக்குமாறு வடிவமைக்கிறான். நல்ல கற்பனை தான்!

அந்த இயந்திரத்தை முதன்முறை சோதனைப் படுத்திப் பார்க்கும் போது ஏதோ கோளாறு ஆகி அது ராக்கெட் போல மேலே மேகங்களுக்கு இடையே சென்று விடுகிறது. திடீர் என்று பார்த்தால் வானத்தில் இருந்து burger விழுகிறது. தனது இயந்திரம் தான் உணவு மழை பொழிகிறது என்று Flint உணர்ந்து கொள்கிறான். கூரை இல்லாத உணவகம் (சாப்பாடு தட்டிலேயே வந்து விழுந்து விடும்!), ஐஸ் கிரீம் மலை, sphagetti புயல், jelly கோட்டை என்று பல அருமையான கற்பனைகள் இருக்கின்றன படத்தில். அந்த தீவே அவனை கொண்டாடுகிறது. அனைவருக்கும் வகை வகையான உணவுகள் கிடைக்கின்றது. பேராசை பெரு நஷ்டம் என்பதற்கேற்ப அந்த தீவில் வசிப்பவர்கள் எல்லாரும் பேராசை உடன் உணவுகள் கேட்டு, உண்டு,  உடல் பெருத்து கஷ்டப் படுகிறார்கள்.

இதற்கு நடுவில் ஒரு TV வானிலை அறிவிப்பாளருடன் காதல், ஒரு போலீஸ்காரரின் மகனுக்கு உதவி என்று கிளைக் கதைகளும் இருக்கின்றன. மூலக்  கதை வித்தியாசமாக, குழந்தைகளின் கற்பனையை தூண்டுவதாகவும் இருந்தாலும் சினிமா கொஞ்சம் சுமார் தான். Fast food, obesity போன்றவற்றிக்கு எதிரான கருத்துகள், ஒரு வெற்றிப் படத்திற்கு "தேவையான" காதல், வில்லன் போன்ற இடைச்செருகல்கள் என்று படம் ஒரு இலக்கு இல்லாமல் போய் நம் பொறுமையை சோதிக்கிறது!

நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் படம் கடியாக இருந்தால் எழுந்து, " டேய், தாங்க முடியலை..படத்தை போடு" என்று கத்துவது மிகவும் பிரபலம். அதே போல, 1 மணி நேரம் படம் பார்த்த பிறகு எனக்கு அப்படித்தான் கத்த வேண்டும் என்று தோணியது! சிறு குழந்தைகளுக்கு (10-12 வயதிற்குட்பட்ட) படம் பிடிக்கும். நமக்கு?!

Friday, January 22, 2010

Eat, Pray, Love - புத்தக விமர்சனம்


கடந்த 10 நாட்களாக வேலை நிமித்தமாக வெளியூர் பயணங்களில் இருந்ததால் இந்த பக்கம் அடிக்கடி வர முடியலை. இந்த பயணங்களில் ஒரு நல்லது - ரொம்ப நாளா பெண்டிங் ல இருக்கும் புத்தகங்களைப் படிக்க ஒரு நல்ல வாய்ப்பு. என்ன, இந்த ஏர்போர்ட் உணவுகளை நினைச்சா தான் படிச்சதும் சாப்பிட்டதும் சேர்ந்து வெளிய வந்திர்ற மாதிரி இருக்குது!!! அதுவும் வர வர இந்த ஏர்லைன்ஸ் காரங்க தொல்லை தாங்க முடியலை..முதல்ல சாப்பாட்டை காலி பண்ணினானுங்க..அப்புறம் free check-in bag.  இப்ப ஒரு பாக்கெட் கடலை மட்டும் குடுக்கிறானுங்க..மொத்தமா 10 கடலை இருந்தது அந்த பாக்கெட்ல!!

அந்தக்  கொடுமையை விட்டுட்டு நம்ம புத்தகம் பக்கம் வருவோம். கொஞ்ச நாட்கள்  முன்பு படிக்க ஆரம்பிச்சு இந்தப்  பயணத்தில் முடித்த புத்தகம் - Elizabeth Gilbert எழுதிய Eat, Pray, Love - One Woman's Search for Everything Across Italy, India and Indonesia. 2006 இல் வெளி வந்து மிகவும் பெயர் வாங்கிய புத்தகம். சில வாரங்களுக்கு முன் (January 2010) இதே ஆசிரியர் எழுதிய  Committed: A sceptic makes peace with marriage என்ற புத்தகமும் வெளி வந்து சக்கை போடு போட்டுக் கொண்டு இருக்கிறது. இரண்டு புத்தகங்களும் NY Times பத்திரிக்கையின் best sellers list இல் இடம் பெற்றுள்ளது.

Eat, Pray, Love புத்தகத்தில், நாம எல்லாருமே வேலைப் பளுவோ, குடும்ப பாரங்களோ அதிகம் ஆகும்போது எல்லாத்தையும் விட்டுட்டு அப்படியே எங்கயாவது கொஞ்ச நாள் ஓடி போய்ரலமா ன்னு ஒரு கணம் நினைச்சிருப்போமே, அதைத் தான் இந்த அம்மா செய்யுறாங்க. 30 வயதில் வாழ்க்கையில் நாம் வெற்றிக்கான அடையாளங்கள்ன்னு எதை நினைக்கிறோமோ அது எல்லாம் எலிசபெத்திற்கு இருக்கிறது. - நியூ யார்க் நகரில் பத்திரிகையாளர் வேலை, அருகில் வசதியான வீடு, கணவன், குழந்தை பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் என்று எல்லாம் இருந்தும் அவருக்கு ஏதோ குறைவது போல ஒரு எண்ணம். நாற்பது வயதில் நாய் குணம் என்று நம்ம ஊரிலும், mid-life crisis என்று இந்த ஊரிலும் கூறிக்கொள்கிறார்களே அதே தான்! மண வாழ்க்கை சரி வராமல், கணவனுடன் விவாகரத்து பெற்று விட்டு ஒரு வருடம் இத்தாலி, இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் பயணம் செல்ல வேண்டும் என்று முடிவெடுக்கிறார். விவாகரத்தைத் தொடர்ந்த மன அழுத்தங்கள்,  தற்கொலை செய்யக்  கூட தோன்றும் எண்ணங்கள், தான் யார், கடவுள் என்றால் என்ன என்று விடாமல் தொடரும் கேள்விகள் எல்லாம் அவரைத் துரத்துகின்றன.

ஒரு மாறுதல் மற்றும் தனது  கேள்விகளுக்கான விடைகள் இரண்டையும் தேடி அவர் இத்தாலி (உணவு மற்றும் கலைகளைப் பற்றி உணர), இந்தியா (ஆன்மீக உணர்வுகளை அறிய) மற்றும் இந்தோனேசியா (மகிழ்ச்சி, ஆன்மீகம், அன்பு அனைத்தையும் அறிய) என்று பயணங்கள் மேற்கொள்கிறார். எத்தனையோ பயணக் கட்டுரைகள் வந்திருந்தாலும் (குறிப்பாக மேற்கத்தியவர்களின் கிழக்கு நோக்கிய தேடல், பயணங்கள் பற்றி) ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையில் அடிக்கடி எதிர்கொள்ளும் உணர்வுகள் (உணவு, ஆன்மீகம், அன்பு, கலை) அனைத்தையும் இவரது கண்ணோட்டத்தில் பார்ப்பது வித்தியாசமாக இருக்கிறது. புத்தகத்தின் கரு என்னவாக இருக்கும் என்று நாம் படிக்கும் முன்னரே நினைத்துப் பார்க்க முடியும் என்றாலும் அபார எழுத்து நடையில் நம்மைக் கட்டிப்  போடுகிறார். தனது சொந்த  அனுபவங்களைப் பற்றி மட்டும் கூறுவதால் அந்தந்த இடங்களுக்கு தரப்படும் முக்கியத்துவமும் பின் தள்ளப் படுகிறது.

தன்னைப் பற்றிய தேடல் என்பது அனைத்து மனிதர்களுக்கும் உண்டு. அதை இவ்வளவு அழகான நடையில், உணர்வு பூர்வமாக, நேர்மையாக எழுதியதில் தான் இந்த புத்தகத்தின் வெற்றி இருக்கிறது. நேரமும் வாய்ப்பும் கிடைத்தால் கண்டிப்பாகப்  படிக்கவும்.

Sunday, January 10, 2010

சுண்டக் கஞ்சியும் தித்திப்புச் சோறும்!!!

சென்னைச் சிங்கம் ஒன்று இந்த  எருமைக்காக எழுதியது..நன்றி நண்பரே!
------------------------------------------------------------------------
வணக்கமுங்க,  நான் தான் போதை குமார்!!!......இனிமே அடிக்கடி  உங்கள பல போதை சமாச்சாரங்களோட  சந்திக்க  போறேன் ( ஆசிரியர் வாய்ப்பளித்தால்!).  ஒவ்வொரு மனுஷனுக்கும் ஏதோ ஒரு போதை அப்பப்ப தேவை படுது.... நாகர்கோயில்ல ஜிஞ்சர் , வட ஆற்காடு மாவட்டத்துல மது கசாயம், கேரள பக்கம் சுட சுட சாராயம்.... இப்படி பல வகையான சோம பானங்கள் உண்டு... அது போல சென்னம்மா பட்டணத்துக்கும் ஒரு விசேஷமான சோம பானம் உண்டு அது தான் நம்ம சுண்டக்  கஞ்சிங்க...

முதல சுண்ட கஞ்சி எப்படி செய்றாங்கன்னு பார்க்கலாம்.....  நல்ல உயர் ரக அரிசிய (ரேஷன் அரிசி மாதிரி ன்னு வச்சுகோங்களேன்..) நல்ல வடிச்சிட்டு அத ஒரு வெள்ளை துணியல போட்டு ஒரு சோறு கூட இன்னொரு  சோறு ஒட்டாம உலர்த்தனும்.. அப்புறம் அத ஒரு மண் பானையில போட்டு அதுக்குள்ள போதை மருந்து  கொஞ்சம்  ஊத்தி ( போதை  மருந்து பேரு தெரியலைங்க)   அந்த வெள்ளை துணியால் வேடு கட்டி நல்ல பள்ளம் தோண்டி அத கடல்  மண்ணுக்குள்ள பொதைச்சிடுவாங்க.. அப்புறம் அத  ஒரு பத்து பதினஞ்சு நாலு கழிச்சு  தோண்டி எடுக்கணும் அப்புறமா அந்த வெள்ளை துணிய அவுத்து பார்த்த அந்த சோறு நல்லா  நொதி வந்து பொங்கி இருக்கும் ....அப்போ மேலாவ   இருக்க  அந்த  நொதிஞ்ச சோறு எடுத்து தனியா  வைப்பாங்க,  அது பேரு தித்திப்பு சோறு...

இது தாங்க  ரொம்ப விசேஷமானது ஏன்னா  அதுல தான் போதையே  இருக்கு... அப்புறம் உள்ள இருக்குற  சோறுல தண்ணியே  ஊத்தி கலக்கிட்டு அப்புறம் அந்த தித்திப்பு  சோறையும் போட்டு நல்ல பிசையணும்..பிறகு  அந்த கலக்குன   தண்ணிய  ஒரு சொம்புல குடிச்சா ரொம்ப பிரமாதமா இருக்கும் ..... இதுக்கு  தொட்டுக்க எலி பூச்சியும், நண்டு மசாலாவும், வறுத்த மீனும் சாப்பிடணும்..... ரொம்ப நல்லா  இருக்கும்... (சொல்லும் போதே நாக்குல தண்ணி தட்டுதுங்க).

இந்த சுண்ட கஞ்சி  தாங்க பல பேருக்கு காலை நாஷ்டா....... இது உடம்புக்கு நல்லா குளிர்ச்சி தரும்.... ஒரு  சொம்பு சுண்ட  கஞ்சி இரண்டு  இளநீருக்கு சமம்னு  இங்க இருக்க பல அனுபவசாலிங்க சொல்லுவாங்க....

நாங்க கல்லூரில  படிக்கும் போது  அல்லா  சனிக்கிழமையும் காலைல பெசன்ட்நகர் பீச்க்கு போவோம்
அங்கே தான் அது ரொம்ப  அது விசேஷம் ... சில சமயங்கள்ல நாங்க காசிமேடு , நடுக்குப்பம், டுமிங் குப்பம், சீனிவாசபுரம் போன்ற இடங்களுக்கும்  போவோம்....  இதமான அந்த கடல் அலை ஒசையோட,  அந்த கருவாட்டு வாசனையோட, பசபசப்பான அந்த உப்பு காத்தோட, ஒரு அழகான ஓலை குடிசைல, கோணி துணி திரைல உட்கார்ந்து பக்கிட் பக்கிடா  குடிக்கிற  சுகமே  தனி  தாங்க.... இன்னா...நான் சொல்லுறது கரீட்டு தானே!?

Thursday, January 7, 2010

சொதி சாப்பிட வாரியளா?

(முன்குறிப்பு: 2 நாளைக்கு முன்னாடி சொதி செய்முறை இங்க போட்ட ராசி, இன்று நம்ம வீட்டுல மதியம் சொதி! அதன் படங்கள் இங்கே - சொதி, உருளை பொடிமாஸ் மற்றும் இஞ்சி பச்சடி!)..இனிமேல் படிங்க!


திருநெல்வேலியில் அல்வாவிற்கு அடுத்த படியா (நாமளே சொல்லிக்க வேண்டியது தானே!) "உலகப் புகழ்" பெற்ற சைவ உணவு  சொதி எனப்படும் தேங்காய்ப்பால் குழம்பு ன்னு சொல்லலாம். இது சூடான சாதத்துடனும் இடியாப்பம் (சேவை) , ஆப்பம் உடனும் நன்றாக இருக்கும். இதைப் பற்றி,  திருநெல்வேலித் தமிழில் அருமையாக எழுதி வரும்  வேணுவனம்சுகா அவரது பதிவுகளில் ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார். அதைப் படிக்க இங்கே செல்லவும்.

தேங்காய்ப் பாலில் செய்யப் படுவதால் அதனுடன் எப்பொழுதும் இஞ்சிப் பச்சடியும் பரிமாறப் படும். இது போக இதற்கு நல்ல சைடு டிஷ் உருளைக் கிழங்கு சிப்ஸ்..அதற்காக $1, $2 க்கு வால்மார்ட்டில் கிடைக்கும் சிப்ஸ் ன்னு நினைச்சிராதீங்க..வீட்டில் செய்யப்படும் சூடான, சுவையான சிப்ஸ்! அது செய்வது அவ்வளவு சுலபம் இல்லாததால் அதற்கு மாற்றாக உருளை காரப் பொடிமாஸ் செய்வது வழக்கம். சொதி  செய்முறை விளக்கம் (உபயம் எனது மனைவி!) இங்கே!
சொதி செய்ய:  
தேவையானவை:

தேங்காய்ப் பால் - ஒரு முழு தேங்காயில் இருந்து (அல்லது) ஒரு can தேங்காய்ப்  பால் (500 ml போல)
காரட், உருளை, முருங்கைக்காய் - ஒவ்வொன்றும் ஒன்று
முந்திரிப் பருப்பு - 15-25
வெள்ளைப் பூண்டு - 10 (இதைப் பிடிக்காது என்றால் விட்டு விடலாம்)
இஞ்சிச் சாறு - 100 ml போல
எலுமிச்சைச் சாறு - 4 ஸ்பூன் அளவில்
பயத்தம்பருப்பு (moong dal) - 2 ஸ்பூன் அளவில் (வேக வைத்தது)
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் குறைந்த அளவில் நீர் வைத்து அனைத்து காய்கறிகள் (1" அளவில் நறுக்கியது) மற்றும்  முந்திரிப் பருப்பை (பூண்டு சேர்ப்பதாக இருந்தால் அதையும்) வேக வைத்துக் கொள்ளவும். இதனுடன் தேங்காய்ப் பாலையும் சேர்த்து கொதிக்கும் முன் (5 நிமிடம் போல) வேகவைத்த பயத்தம்பருப்பை சேர்த்து இறக்கி விடவும். சற்று ஆறியவுடன் இஞ்சிச் சாறு, எலுமிச்சைச் சாறு மற்றும் உப்பு சேர்க்கவும். (கவனிக்க: தேங்காய்ப் பால் கொதித்தாலோ, இஞ்சி/எலுமிச்சைச் சாறுகள் சூட்டுடன் சேர்க்கப் பட்டாலோ, குழம்பு திரிந்து தயிர் போல் ஆகி விடும்).


இஞ்சிப் பச்சடி:
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அதில்  பொடியாக நறுக்கப் பட்ட இஞ்சி (100 கிராம் அளவில்), சிறிது பெருங்காயம், 3 மிளகாய் வத்தல் போன்றவற்றை வதக்கிக் கொள்ளவும். நன்கு வதங்கிய பிறகு, இவற்றை சிறிதளவு நீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை போன்றவற்றை வாணலியில் தாளித்து விட்டு, அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதித்த உடன் இறக்கலாம்.

செய்து பார்த்து விட்டு மறக்காம இங்க வந்து சொல்லுங்க..!!!

பி.கு: சொதியில் இஞ்சி தவிர வேறு காரம் எதுவும் இல்லாததால், இஞ்சிப் பச்சடியை நன்கு காரமாக செய்து கொள்ளவது நல்லது!
பி.பி.கு: முந்திரிப் பருப்பு, தேங்காய்ப் பால் எல்லாம் போட்டால் அது dessert மாதிரி அல்லவா இருக்கும், நீ குழம்பு ன்னு சொல்லுறயே ன்னு ஒரு கும்பல்  அடிக்கடி எங்கிட்ட கேள்வி கேட்பாங்க..அவங்களும் செய்து பார்த்து சொல்லலாம்...:-)

ப்ரீயாக் கிடைச்சா நாம தான் பீனாயில் குடிப்போமே!

அமெரிக்கா வாழ் தமிழ் மக்களுக்கோர் நற்செய்தி! cricinfo.com வெப்சைட் ல இந்தியா-இலங்கை-பங்களாதேஷ் பங்குபெறும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியை (espn360.com வழியாக) இலவசமாக காண்பிக்கிறார்கள் (live video). OC la illegal link, காசு குடுத்து illegal link nu கஷ்டப்படும் மக்கள் அங்க போங்க..இந்த செய்தியை முதலில் தெரிவித்த நண்பர் (ஆதி, ஏழாவது) மனிதனுக்கு நன்றி! (இந்த link அமெரிக்கால மட்டும் தான் வேலை செய்யுமாம்!).

Monday, January 4, 2010

பனி விழும் மலர் (?) வனம்...

Christmas, புது வருடம் என்று விடுமுறைகள் முடிந்து சோகத்துடன் அனைவரும் வேலைக்கு திரும்பும் சமயத்தில் அமெரிக்கா முழுவதிலும்,  வட இந்தியாவிலும் சில நாட்களாக நல்ல குளிர் என்று தெரிகிறது.  இங்கு Florida, Texas போன்ற தென் மாகாணங்களில் கூட  நல்ல குளிர் போல. கடந்த 3-4 நாட்களாக இங்கு Buffalo வில்  நல்ல பனிப்பொழிவு.  வெள்ளி இரவிலிருந்து ஞாயிறு மாலைக்குள் கிட்ட தட்ட ஒரு அடிக்கு  பனி விழுந்தது. பனி அழகை ரசிக்க இங்க சில படங்கள்...(ஞாயிறு மாலை எடுத்தது..). (Christmas மரம் எனது வீட்டிற்கு எதிர் வரிசையில் உள்ள வீட்டு  வாசலில். கிட்டத்தட்ட 2 படிகளை மறைக்கும் அளவு எனது வீட்டு  வாசலில் பனி).




Buffalo, NY பனிப்பொழிவிற்கு மிகவும் பெயர் பெற்றது. ஆனால் அதில் பல விஷயங்கள் பொய்யானவை தான். முதலில் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது Lake Effect Snow எனப்படும் ஏரியால் உருவாகும் பனி பற்றி.  குளிர் காலங்களில் வரும் பனிப்பொழிவு பொதுவாக  பனிப் புயலால் (winter storm) உருவாகுவது தான். ஆனால் ஏரிகளுக்கு அருகில் இருக்கும் (Buffalo போன்ற) இடங்களில் Lake Effect தான் பலப் பனிப் பொழிவுகளுக்கு காரணம்.

வெப்பநிலை ஜீரோ டிகிரி செல்ஷியஸ்க்கு  (32 F) கீழ் செல்லும் போது நீர் பனிக்கட்டியாக மாறும். ஆனால், குளிர் கால ஆரம்பத்தில் தட்ப வெப்பம் ஜீரோ டிகிரிக்கு கீழ் சென்றாலும் ஏரிகளில் இருக்கும் நீர் உறைந்திருக்காது. (இது ஏன் நடக்கிறது என்று தெரிந்து கொள்ள specific heat capacity பற்றி தெரிந்து கொள்வது அவசியம். விருப்பம் இருப்பவர்கள் விக்கீபீடியாவில் படித்து அறிந்து கொள்ளலாம்). அப்பொழுது குளிர்ந்த காற்று ஏரிகளின் மேல் வீசும் போது அதில் உள்ள ஈரப் பதத்தை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள ஊர்களில் பனியாகப் பொழியும். இது ஏரிகளில் அருகில் உள்ள இடங்களில் மட்டும் நடக்கும் ஒரு localised effect. எனவே Lake Effect Snow என்பது சில மைல் தூரங்களிலையே மிகுந்த வித்தியாசம் கொடுக்கும். உதாரணமாக Buffalo வில் இருந்து சில மைல் தொலைவில் (தென்புறம்) உள்ள மலைப் பகுதிகளில் 2-3 அடி பனி பெய்யும் போது இங்கு கால் அடிக்கும் குறைவாகத்தான் பனி பெய்யும். பல வருடங்கள் ஜனவரி மத்தியிலோ இறுதியிலோ  ஏரிகளின் மேல் புறம் உள்ள நீர் உறைந்து பனிக்கட்டியாக மாறி விடும். அதற்குப்பின் இந்த Lake Effect Snow முடிந்து சாதாரணப் பனிப்பொழிவு மட்டும் தான் இருக்கும்.

ஆனால், செய்தி தாள்களில் A foot of snow engulfs Buffalo போன்ற செய்திகளைப் பார்த்துவிட்டு போன் செய்யும் நண்பர்களுக்கு நாங்கள் பல முறை ஏமாற்றம் தான் அளித்துள்ளோம்! மேலும் Buffalo வின் மிகப்  பெரிய புறநகர்கள் ஆன Amherst, Williamsville (இங்கு தான் மக்கள் தொகை அதிகம்) பகுதிகள் அருகில் உள்ள 2 ஏரிகளுக்கு (Lake Erie, Lake Ontario) நடுவில் உள்ளது போல அமைந்துள்ளதால் புறநகர்களில் பனிப் பொழிவு மிகவும் குறைவு. இருந்தாலும், வருடத்தில் 3-4 முறை இது போல கிட்டத்தட்ட ஒரு அடி பனி பெய்யும். அப்பொழுது குழந்தைகளுக்கு மிகவும் கொண்டாட்டம்..பனி மனிதன் (snow man) செய்வது, அருகில் உள்ள park களுக்கு சென்று சரிவில் வழுக்கி விளையாடுவது என்று ஊரே களை கட்டும்! அந்தப்  படங்கள் கூடிய விரைவில்..

Saturday, January 2, 2010

அவதார் (2009) - விமர்சனம்


2009 ஆண்டு முடிவடையும் தருணத்தில் வந்து உலகைக் கலக்கி கொண்டு இருக்கும் படம். Titanic படம் எடுத்து உலகையே தன் பக்கம் திருப்பிய James Cameron இன் 4 வருட முயற்சி தான் கிராபிக்ஸ் கலக்கலில் வந்திருக்கும் அவதார். முதலில் ஒரு டிஸ்கி: இந்த படத்தை 3D இல் மட்டும் பார்க்கவும். அமெரிக்காவில் இருக்கும் நண்பர்கள் IMAX-3D இல் பார்க்கும் வாய்ப்பு இருந்தால்  தவற விடாதீர்கள். நான் 3D மற்றும் IMAX-3D இரண்டிலும் பார்த்தேன். 3D இல் ஒரு படத்தை 3D இல் பார்ப்பது போலவும், IMAX-3D இல் நாமே அந்த படத்தில் நடைபெறும் காட்சிகளுக்கு உள்ளே இருப்பது போலவும் அருமையான அனுபவம் கிடைக்கிறது.

ஏற்கனவே சில பல விமர்சனங்களில் கூறி இருந்தது போல படம் நம்ம ஊரு மசாலா படங்களின் கதையை ஒத்து இருப்பது உண்மை தான்..விட்டலாச்சார்யா காலத்து கூடு விட்டு கூடு பாயும் விஷயங்களும் உண்டு தான். இப்படி என்ன கூறினாலும் படத்தில்  முதலில் இருந்து கடைசி வரை (2:40 மணி நேரம், அதுவும் இங்கே interval இல்லாமல்) நம்மைக் கட்டிப் போடும் வித்தை இருக்கிறது. ஒரு வெற்றிகரமான படத்திற்கு அது தானே தேவை!

இந்த படத்திற்கும் நம்ம ஊரு நமிதாவிற்கும் நிறைய ஒற்றுமை உண்டு. இந்த படத்தில் என்ன எதிர்பார்த்து போகிறீர்களோ (3D effect, graphics பிரமாண்டம்) அது தேவைக்கு அதிகமாகவே தரப்பட்டிருக்கிறது. நமிதா படத்தில் போய் நடிப்பையோ கதையையோ எதிர்பார்த்து போனால் எப்படி அது நம் தப்போ அது போல....சரி விடுங்க. நமிதாவைப் பத்தி பேசி அவதார் ஐ மறந்திரப் போறோம்!!!

தொழில் நுட்ப முன்னேற்றங்கள் நம்மை ஆச்சரியப் பட வைப்பது (getting impressed, chcho cute என்று கூறுவது போல) ஒரு வகை, நம்மை பிரமிக்க வைப்பது (mind-boggling, overwhelming) என்பது இன்னொரு வகை. இந்தப் படத்தில் ஒரே சமயத்தில் நம்மை ஆச்சரியப் படவும், பிரமிக்கவும் வைக்கிறார்கள். படத்தின் கதையையோ, மற்ற விவரங்களையோ கூறி உங்களின்  எதிர்பார்ப்பை திசை திருப்ப விரும்பவில்லை. ஆனால், சினிமா ரசிகர்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்களில் இதுவும் ஒன்று.