Friday, January 22, 2010

Eat, Pray, Love - புத்தக விமர்சனம்


கடந்த 10 நாட்களாக வேலை நிமித்தமாக வெளியூர் பயணங்களில் இருந்ததால் இந்த பக்கம் அடிக்கடி வர முடியலை. இந்த பயணங்களில் ஒரு நல்லது - ரொம்ப நாளா பெண்டிங் ல இருக்கும் புத்தகங்களைப் படிக்க ஒரு நல்ல வாய்ப்பு. என்ன, இந்த ஏர்போர்ட் உணவுகளை நினைச்சா தான் படிச்சதும் சாப்பிட்டதும் சேர்ந்து வெளிய வந்திர்ற மாதிரி இருக்குது!!! அதுவும் வர வர இந்த ஏர்லைன்ஸ் காரங்க தொல்லை தாங்க முடியலை..முதல்ல சாப்பாட்டை காலி பண்ணினானுங்க..அப்புறம் free check-in bag.  இப்ப ஒரு பாக்கெட் கடலை மட்டும் குடுக்கிறானுங்க..மொத்தமா 10 கடலை இருந்தது அந்த பாக்கெட்ல!!

அந்தக்  கொடுமையை விட்டுட்டு நம்ம புத்தகம் பக்கம் வருவோம். கொஞ்ச நாட்கள்  முன்பு படிக்க ஆரம்பிச்சு இந்தப்  பயணத்தில் முடித்த புத்தகம் - Elizabeth Gilbert எழுதிய Eat, Pray, Love - One Woman's Search for Everything Across Italy, India and Indonesia. 2006 இல் வெளி வந்து மிகவும் பெயர் வாங்கிய புத்தகம். சில வாரங்களுக்கு முன் (January 2010) இதே ஆசிரியர் எழுதிய  Committed: A sceptic makes peace with marriage என்ற புத்தகமும் வெளி வந்து சக்கை போடு போட்டுக் கொண்டு இருக்கிறது. இரண்டு புத்தகங்களும் NY Times பத்திரிக்கையின் best sellers list இல் இடம் பெற்றுள்ளது.

Eat, Pray, Love புத்தகத்தில், நாம எல்லாருமே வேலைப் பளுவோ, குடும்ப பாரங்களோ அதிகம் ஆகும்போது எல்லாத்தையும் விட்டுட்டு அப்படியே எங்கயாவது கொஞ்ச நாள் ஓடி போய்ரலமா ன்னு ஒரு கணம் நினைச்சிருப்போமே, அதைத் தான் இந்த அம்மா செய்யுறாங்க. 30 வயதில் வாழ்க்கையில் நாம் வெற்றிக்கான அடையாளங்கள்ன்னு எதை நினைக்கிறோமோ அது எல்லாம் எலிசபெத்திற்கு இருக்கிறது. - நியூ யார்க் நகரில் பத்திரிகையாளர் வேலை, அருகில் வசதியான வீடு, கணவன், குழந்தை பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் என்று எல்லாம் இருந்தும் அவருக்கு ஏதோ குறைவது போல ஒரு எண்ணம். நாற்பது வயதில் நாய் குணம் என்று நம்ம ஊரிலும், mid-life crisis என்று இந்த ஊரிலும் கூறிக்கொள்கிறார்களே அதே தான்! மண வாழ்க்கை சரி வராமல், கணவனுடன் விவாகரத்து பெற்று விட்டு ஒரு வருடம் இத்தாலி, இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் பயணம் செல்ல வேண்டும் என்று முடிவெடுக்கிறார். விவாகரத்தைத் தொடர்ந்த மன அழுத்தங்கள்,  தற்கொலை செய்யக்  கூட தோன்றும் எண்ணங்கள், தான் யார், கடவுள் என்றால் என்ன என்று விடாமல் தொடரும் கேள்விகள் எல்லாம் அவரைத் துரத்துகின்றன.

ஒரு மாறுதல் மற்றும் தனது  கேள்விகளுக்கான விடைகள் இரண்டையும் தேடி அவர் இத்தாலி (உணவு மற்றும் கலைகளைப் பற்றி உணர), இந்தியா (ஆன்மீக உணர்வுகளை அறிய) மற்றும் இந்தோனேசியா (மகிழ்ச்சி, ஆன்மீகம், அன்பு அனைத்தையும் அறிய) என்று பயணங்கள் மேற்கொள்கிறார். எத்தனையோ பயணக் கட்டுரைகள் வந்திருந்தாலும் (குறிப்பாக மேற்கத்தியவர்களின் கிழக்கு நோக்கிய தேடல், பயணங்கள் பற்றி) ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையில் அடிக்கடி எதிர்கொள்ளும் உணர்வுகள் (உணவு, ஆன்மீகம், அன்பு, கலை) அனைத்தையும் இவரது கண்ணோட்டத்தில் பார்ப்பது வித்தியாசமாக இருக்கிறது. புத்தகத்தின் கரு என்னவாக இருக்கும் என்று நாம் படிக்கும் முன்னரே நினைத்துப் பார்க்க முடியும் என்றாலும் அபார எழுத்து நடையில் நம்மைக் கட்டிப்  போடுகிறார். தனது சொந்த  அனுபவங்களைப் பற்றி மட்டும் கூறுவதால் அந்தந்த இடங்களுக்கு தரப்படும் முக்கியத்துவமும் பின் தள்ளப் படுகிறது.

தன்னைப் பற்றிய தேடல் என்பது அனைத்து மனிதர்களுக்கும் உண்டு. அதை இவ்வளவு அழகான நடையில், உணர்வு பூர்வமாக, நேர்மையாக எழுதியதில் தான் இந்த புத்தகத்தின் வெற்றி இருக்கிறது. நேரமும் வாய்ப்பும் கிடைத்தால் கண்டிப்பாகப்  படிக்கவும்.

No comments: