Tuesday, February 9, 2010

எல்லாம் ஒரு விளம்பரந்தேன்!

நம்மூருல பையனை காலேஜ்ல சேர்த்த உடனயே அவன்  பெயருக்குப் பின்னாடி B.A., B.E., ன்னு எதாவது போட்டு அதுக்கு மேல ஒரு கோடு போடுற வழக்கம் உண்டு. அதுவும் அந்த நேரம் பார்த்து வீட்டுல எதாவது கல்யாணம் காட்சின்னு வந்தாச்சுன்னா, தங்கள் நல்வரவை நாடும்ன்னு போட்டு கீழே பெயர், டிகிரி, கோடு எல்லாம் போட்டு பத்திரிக்கை அடிச்சிருவாங்க. என்ன, முதல் வருஷம் வாங்கின அரியர்சையே எப்ப முடிப்போம்ன்னு அவனுக்கு தெரியாத சமயங்களில் இந்தக் கோடு பல வருஷம் அப்படியே இருக்கவும் சான்ஸ் இருக்குது!  என் அத்தை பையன் ஒருத்தரு கடந்த 30 வருஷமா B.A. க்கு மேல கோடு போட்டுட்டு இருக்காரு - அவர் காலேஜ் போனதே மொத்தம் 1 வருஷம் தான்!!!

இப்படி போன தலைமுறைல காலேஜ்/பெரிய படிப்புன்னு போறதே நிறைய குடும்பங்களில் பெரிய சாதனையா இருந்தது. அதுவும் கிராமப் புறங்களில் இருந்து பையன் குடும்பத்தில் முதல்முறையா காலேஜ் போனா, அது குடும்பப் பெருமை தான். இப்ப அப்படி எல்லாம் இருக்கிற மாதிரி தெரியலை. (அதான் தெருவுக்கு 2 காலேஜ், ஊருக்கு 3 இன்ஜினியரிங் காலேஜ்ன்னு படிக்கிறதுக்கு ஆள் தேடிட்டு இருக்காங்களே!). இருந்தாலும் இந்தப் பெருமைக்கு எருமை மேய்க்கிற மாதிரி டிகிரில கோடு போடுற பழக்கம் இன்னும் இருந்துகிட்டு தான் இருக்குது, என்ன இப்ப வேற மாதிரி. ஒரு மாசம்  NIIT மாதிரி இடங்களில் போய் கடலைப் போட்டுட்டு வந்திட்டு java, html, c++, oops, network engineer ன்னு எல்லா கோர்ஸ் ஐயும் மொத்தமாக் கரைச்சுக்குடிச்சா மாதிரி CV ல போட்டுக்கிறது நிறைய இடங்களில் நடக்குது. கம்பெனிகளுக்கும் இதெல்லாம் தெரியும் (இன்டர்வியு பண்ணுறவனும் இப்படிப்  பண்ணித்தான் வந்திருப்பானோ?). இருந்தாலும் அவங்களுக்கு தேவை ஆட்கள் தான், பல நேரங்களில் ஆட்களின் திறமை/படிப்பு இரண்டாம் பட்சம் தான். உள்ள வந்த பிறகு எப்படியும் ட்ரைனிங்ல பிடிச்சிருவோம்ன்னு  விட்டிருவாங்க.

இப்படி நம்மப் படிப்பை வச்சு காமெடி பண்ணுறது ரொம்ப சாதாரணமா ஆகிப்போச்சுது?! சென்ற வார ஆனந்த விகடன்ல பாடலாசிரியர் நா. முத்துக்குமார் ஒரு பேட்டி அளித்திருந்தார். விகடன்ல எனர்ஜி பக்கங்கள்ன்னு ஒரு பகுதில. அதைப் படித்த உடன் தோன்றிய விஷயங்கள் இங்கே!! (விகடன் மாதிரி பாரம்பரியப் பத்திரிக்கைல ஆங்கிலக் கலப்பு ரொம்ப இருக்குதுன்னு நண்பர் ஒருவர் சமீபத்துல கூறியது நினைவுக்கு வருது - junior விகடன், energy பக்கங்கள், இன்பாக்ஸ், ஸ்பெஷல் 1, கிளிக்ஸ் இப்படி! - அதை இன்னொரு முறைப் பார்ப்போம்!!). அந்த பேட்டியில் கவிஞர் எப்படி இந்த நல்ல நிலைக்கு தான் வந்தார்  (பல  விருதுகள்  பெற்றவர்,  பல படங்களில் வெற்றிப் பாடல்களைக் குடுத்துக் கொண்டு இருப்பவர்!) என்று இளைஞர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் நன்கு கூறி இருந்தார். அந்த பேட்டில 2 விஷயங்கள் எனக்கு உதைச்சது! ஒன்று, இவர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் (B.Sc., இயற்பியல்) ஒரு ஆசிரியர் திட்டியதாகவும், அப்பொழுது நன்கு படிக்கும் மாணவன் ஒருவன் இவரைப் பார்த்து சிரித்ததாகவும் கூறி உள்ளார். அதற்காக வைராக்கியம் கொண்டு இவர் 85% மதிப்பெண்ணுடன் கல்லூரியை முடித்தாராம். இளைஞர்கள் மனசு வைத்தால் சாதிக்க முடியாதது இல்லை என்ற கருத்தை வலியுறுத்த இதைக் கூறியது நல்லது தான். ஆனா, இவரைப் பார்த்து சிரித்த மாணவனுக்கு B.Tech. இடம் கிடைக்கவில்லை என்றும் இவருக்கு கிடைத்தது என்றும் கூறி இருப்பது தேவை தானா? அந்த மாணவன் என்ன மதிப்பெண்கள் பெற்றான், இவருக்கு அல்லது அவனுக்கு ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு இருந்ததா போன்ற முக்கியமான விவரங்கள் இல்லாமல் பெருமைக்கு எருமை மேய்த்தல் தேவையா? நானும் B.Sc. இயற்பியல் முடித்து B.Tech. இடத்திற்கு விண்ணப்பம் அனுப்பியவன் தான் (ஏறக்குறைய திரு. முத்துக்குமார் படித்த அதே காலக்கட்டத்தில் தான்?)  - 90% க்கு மேல்  எடுத்து இடம் கிடைக்காமல் இருந்த நண்பர்களும் இருக்கிறார்கள், அதே போல 70% எடுத்து B.Tech. சேர்ந்த நண்பர்களும் இருக்கிறார்கள்.

B.Tech. இடம் கிடைத்தாலும், இவர் தமிழ் மீதுள்ள ஆர்வத்தினால், M.A. தமிழ் இலக்கியம் சேர்ந்துப் படித்தார் என்பது மிகவும் முக்கியமான விஷயம். நம்ம ஊருல பையன் எதுல ஆர்வமா இருக்கான்னு யாருமே கேட்கிறதில்லை. உற்றார் உறவினர், பக்கத்துக்கு வீட்டு பையன் என்ன படிக்கிறான் போன்றவை தான் தன் மகன்/மகள் எங்க, என்ன படிக்கணும்னு தீர்மானிக்கும் சக்திகள்?!! அப்படிப் பட்ட சமூகச் சூழ்நிலையில் தனக்கு விருப்பமான தமிழ் இலக்கியம் படிக்கணும்னு முடிவு பண்ணி அதை செய்து காட்டியது பாராட்டத் தக்கது. ஆனா, இங்கயும் ஒரு விஷயம் இடிக்குது.
M. A. தமிழ் இலக்கியம் சென்னையில் படிச்சு முடிச்ச உடன், இவரை அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகம் மாதம் 3 லட்ச ரூபாய் சம்பளத்துக்கு தமிழ் முனைவர் வேலைக்கு கூப்பிட்டதாம். ஆனால், வேண்டாம் என்று நிராகரித்து விட்டு திரைப்படத் தொழிலில்  இறங்கியுள்ளதாகக் கூறுகிறார்.  நானும் அமெரிக்காவில் கல்வித்துறையில் தான் வேலை செய்து கொண்டிருக்கிறேன் - இவரா அந்த வேலைக்கு விண்ணப்பிக்காம யாரும் இவரைக் கூப்பிட எந்த வழியும் இருப்பதாக எனக்கு தோணவில்லை?! அப்புறம் எனக்கு தெரிஞ்சு அமெரிக்காவில் நூற்றுக்கும் குறைவான மாணவர்கள் தான் பல்கலைக்கழகங்களில் தமிழ் படித்துக் கொண்டிருக்கிறார்கள். M.A. முடித்த ஒருவருக்கு கிட்டத்தட்ட $80-100,000 (வருடத்திற்கு) ஆரம்பத்திலேயேக் கொடுத்து எந்த பல்கலைக்கழகமும் வேலை வழங்கும் என்பது எனக்கு சந்தேகமே!

இதெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால், இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை வழங்கும் ஒரு நல்ல கட்டுரையில் எதற்கு இந்த பெருமை எல்லாம்? இதற்கும் B.A. என்று எழுதி அதன் மேல் கோடு போட்டுக்கொள்வதற்கும்  என்ன வித்தியாசம்? கவுண்டமணி கரகாட்டக்காரன் படத்தில் சொல்லும், "இந்த சினிமாக் காரங்க தான் தனக்கு தானே போஸ்டர் அடிச்சு ஒட்டிக்கிறாங்க..ஒன்னுமே கிடைக்கலைன்னா பிறந்த நாள் கொண்டாடிக்கிறாங்க" வசனம் தான் நினைவுக்கு வருகிறது. என்ன சொல்லுறீங்க?

2 comments:

Partha said...

Good one. Good flow in the "nadai".

அருமையான எருமை said...

பார்த்தா!! சிறப்புத் தமிழ் படிச்ச நீயே நம்ம நடை நல்ல இருக்குதுன்னு சொல்லிட்டயே! நன்றி! நன்றி!!